கூத்தாநல்லூர் அருகே ரூ. 5 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 22nd March 2019 09:34 AM | Last Updated : 22nd March 2019 09:34 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 5 லட்சம் பறிமுதல்
செய்யப்பட்டன.
17- ஆவது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், கூத்தாநல்லூர் அருகே உள்ள அத்திக்கடை கடைத் தெருவில், பறக்கும் படை அலுவலர் இரா.தேவராஜன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர்கள் எஸ். ரமேஷ், நாகராஜன், காவலர்கள் ராஜேஸ், அருள்குமார் உள்ளிட்டோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கொரடாச்சேரியிலிருந்து அத்திக்கடைக்கு வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் வந்தவரிடம் ரூ.5 லட்சம் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, பறக்கும் படையினர் நடத்திய விசாரணையில், அந்த பணத்தைக் கொண்டு வந்தவர் கொரடாச்சேரி, வடக்கு மாங்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (64) என்பதும், பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து, ரூ. 5 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டு, திருவாரூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த பணத்தை கொண்டுவந்த விஜயகுமார், கொரடாச்சேரியில் பர்னிச்சர் கடை நடத்தி வருவதாகவும், ரூ. 5 லட்சம் பணத்தை, அத்திக்கடையில் உள்ள தனியார் வங்கியில் செலுத்த வந்ததாகவும் கூறினார். ஆனால், இதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 5 லட்சத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...