நாகை மக்களவைத் தொகுதி: 15 மனுக்கள் ஏற்பு
By DIN | Published On : 28th March 2019 06:19 AM | Last Updated : 28th March 2019 06:19 AM | அ+அ அ- |

நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிட 15 பேருடைய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நாகை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 18- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-இல் தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட மாற்று வேட்பாளர் உள்பட 31 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, 19 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணைக்கு பிறகு 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்கள் பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு, அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் குருவைய்யா, அமமுக வேட்பாளர் செங்கொடி, மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி வேட்பாளர் அம்பிகாபதி, தமிழக இளைஞர் கட்சி வேட்பாளர் ஜெயலட்சுமி, ஊழல் ஒழிப்பு செயலாக்கக் கட்சி வேட்பாளர் வேதரெத்தினம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாலதி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அனிதா மற்றும் சுயேச்சைகள் என 15 பேர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
செங்கொடி மனுவை ஏற்பதில் தாமதம்: அமமுக வேட்பாளர் செங்கொடி மீது சரவணன் என்பவர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்திருந்தது: காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவராக செங்கொடி பணியாற்றியபோது, அவர் நிதி மோசடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக புகார் எழுந்தது. இதையடுத்து, மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் விசாரணை மேற்கொண்டதில் செங்கொடி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் இழப்பீடாக ரூ. 6,34,485 பணமும் செலுத்தியுள்ளார். அவரது வேட்பு மனுவில் இவற்றை மறைத்து மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படாததால், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, செங்கொடி அளித்த விளக்கத்தில், கூட்டுறவு நடைமுறைப்படியே தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆட்சேபணை மனு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்து வேட்பு மனுவை ஏற்கவேண்டுமென தெரிவித்திருந்தார். இதையடுத்து, இருதரப்பு மனுக்களையும் விசாரணை செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் த. ஆனந்த், விசாரணைக்குப் பிறகு செங்கொடி வேட்பு மனுவை ஏற்பதாக அறிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...