பிரதமர் மோடியால் நாட்டுக்கே ஆபத்து: இரா. முத்தரசன்
By DIN | Published On : 28th March 2019 06:20 AM | Last Updated : 28th March 2019 06:20 AM | அ+அ அ- |

பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கே ஆபத்து என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.
திருத்துறைப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற நாகை மக்களவைத் தொகுதி குழு கூட்டத்தில் மேலும் பேசியது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்ற பிரசாரத்தை கடந்த 4 ஆண்டு காலமாக செய்து வருகிறது. இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பிற நாடுகளால் எவ்விதமான பாதிப்பும், ஆபத்தும் இல்லை. இந்தியாவில் ஆட்சி செய்யும் மோடியால் தான் நாட்டுக்கே ஆபத்து உள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வகுத்தளித்த எழுத்துரிமை, பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இந்தியாவில் பாசிஸ கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. 2-ஆவது உலகப் போருக்கு காரணமான ஹிட்லரின் மறு உருவமாக மோடி செயல்படுகிறார். நீட்தேர்வு, காவிரி நீர் பிரச்னைகளில் தமிழகத்துக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளார் அவர்.
இயற்கை சீற்றத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது, மோடி கண்டுகொள்ளவில்லை. மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. முதல்வர் எடப்பாடி வலியுறுத்தவேண்டுமென எதிர்க்கட்சிகள்தான் தொடர்ந்து வலியுறுத்தியது.
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளோம் என்று முதல்வர் பழனிசாமி கூறுகிறார். அப்படி ஒரு தீர்மானம் வரவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இதற்கு, தமிழக அரசு மறு பதிலளிக்கவில்லை.
ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை மத்திய அரசு சிதைத்துள்ளது. அரியலூரில் மாணவி அனிதா தற்கொலைக்கு எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்த ஜுன் 3-ஆம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் விடுதலை பெறும் நாளாக மாறும். மோடி ஆட்சியும், எடப்பாடி ஆட்சியும் தூக்கி எறியப்படும். கலைஞரின் சொந்த தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் கனவை நினைவாக்க அனைவருக்கும் கதிர்அரிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் என்றார் முத்தரசன்.
கூட்டத்தில், வேட்பாளர் எம். செல்வராசு பேசியது: தான் முன்பு மக்களவை உறுப்பினராக பணியாற்றியபோது அப்போதைய விவசாயத் துறை அமைச்சர் சதுரணன் மிஸ்ரா மூலமாக விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்ததை நினைவு கூர்ந்து, தன்னை மீண்டும் தேர்ந்தெடுத்தால் தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றார்.
கூட்டத்தில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே.உலகநாதன், கோ. பழனிசாமி, வை. சிவபுண்ணியம், மக்களவை முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...