மன்னார்குடியில் புதன்கிழமை நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மன்னை ப. நாராயணசாமி நகர் பாமணியற்றின் வடக்கரை சிவாஜி நகர் பகுதி கரையோரத்தில் மன்னார்குடி ஆசாத் தெருவைச் சேர்ந்த சிங்கராவேல் (60) என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு ஆலை புதன்கிழமை வெடி விபத்து ஏற்பட்டு, ஆலை உரிமையாளர் சிங்காரவேலு உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து, தகவலறிந்து அங்கு சென்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வெடி விபத்து நிகழந்த இடத்தை பார்வையிட்டு, பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர், விபத்தில் உயிரிழந்த வாணப்பட்டறை உரிமையாளர் சிங்காரவேல் உள்ளிட்டோரின் வீடுகளுக்குச் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அரசு மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை பார்வையிட்டார். பின், காயமடைந்து உள்நோயாளிகளாக அனுதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜி. பாலு, நகரச் செயலர் வீரா. கணேசன், ஒன்றியச் செயலர் க. தனராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் வெடிவிபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். வாணப்பட்டறை உரிமையாளர் சிங்காரவேல் அதிமுக பிரமுகர் ஆவார். இவரது மனைவி கோமதி
மன்னார்குடி அதிமுக நகர் மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த வீரையன், கோமதியின் தந்தையாவார், சகோதரர் வீ. கண்ணதாசன் அதிமுக நகர் மன்ற உறுப்பினராக தொடர்ந்து இரண்டு முறை இருந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.