இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 05th May 2019 01:33 AM | Last Updated : 05th May 2019 01:33 AM | அ+அ அ- |

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து, திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஹெச். பீர் முஹம்மது தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலர் இ.பாரூக் பங்கேற்று பேசியது: எந்த ஒரு மனிதனும் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வது, தற்கொலை செய்து கொள்வது, இஸ்லாத்துக்கு எதிரான செயல் என்பதை பிற மத மக்களே விளங்கி வைத்திருக்கும் போது, இஸ்லாத்துக்காக மனித வெடிகுண்டாக மாறி அப்பாவி மக்களைக் கொலை செய்தோம் என்று பயங்கரவாதிகள் சொல்வார்களேயானால், அது இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லாத மற்றும் இஸ்லாம் மார்க்கம் மிகக் கடுமையாக தடுக்கக்கூடிய பாவமாகும். போர்க்களத்தில் கூட பல மனிதநேய மாண்புகளைக் கடைப்பிடிக்க சொல்லும் இஸ்லாத்தில், இதுபோன்ற மனிதத்தன்மையற்ற செயல்களுக்கு துளி அளவும் அனுமதி இல்லை.
முஸ்லிம் சமுதாயம் இதுபோன்ற மனித உயிர்களைப் பறிக்கும் பயங்கரவாத செயல்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. இந்தத் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் எந்த வகையிலும் மதத்தோடு தொடர்பு படுத்தாமல், ஒட்டுமொத்த சமுதாயத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள்.
எப்படி இயற்கைப் பேரிடர் காலங்களில் மதபேதம் பாராமல் அனைத்து சமுதாய மக்களுக்காகவும், முஸ்லிம் சமுதாயம் களம்கண்டு பணியாற்றியதோ, அதேபோல் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் களமிறங்கி மக்களுக்கு அரணாக நின்று காக்கும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலர் அனஸ் நபில், மாவட்டப் பொருளாளர் அப்துல் பாசித், மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் மாலிக், மாவட்டத் துணைச் செயலர்கள் சக்கரை கனி, முகமது பாசில், முகமது சலீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.