மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக கயிறு தொழிற்சாலைக்கு தீ வைத்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கோட்டூர் தோட்டம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் இக்பால் என்கிற அப்துல் சலாம் (53). இவர் தனது வீட்டின் அருகே தேங்காய் நாரைக் கொண்டு கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் (23). இவருக்கும், அப்துல் சலாமுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
கடந்த வாரம் அனுமதியின்றி மதுப்புட்டிகளை சேவியர் விற்பதை எதிர்த்து ஊர்க் கூட்டத்தில் அப்துல் சலாம் தீர்மானம் கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்த சேவியர் தாக்கியதில், அப்துல் சலாம் காயமடைந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, சேவியர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அப்துல் சலாமின் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த கோட்டூர் தீயணைப்புப் படையினர், தீ மேலும் பரவாமல் தடுத்தனர். எனினும், தொழிற்சாலையில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.
இதைத்தொடர்ந்து, முன்விரோதம் காரணமாக கயிறு தொழிற்சாலைக்கு சேவியர் தீ வைத்ததாக கோட்டூர் காவல் நிலையத்தில் அப்துல் சலாம் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, சேவியரை கைது செய்தனர்.