நடப்பதற்கே சிரமத்தை ஏற்படுத்தும் நூலகச் சாலை!
By DIN | Published On : 05th May 2019 01:31 AM | Last Updated : 05th May 2019 01:31 AM | அ+அ அ- |

திருவாரூர் மைய நூலகத்துக்குச் செல்லும் சாலை, கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே சிரமைத்தை ஏற்படுத்துகிறது. இதைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நூலக வாசகர்கள் வலியுறுத்துகின்றனர்.
நாகை தேசிய நெடுஞ்சாலையில், ரயில்வே மேம்பாலம் அருகே திருவாரூர் மாவட்ட மைய நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் பொது அறிவு, வரலாறு, புவியியல், கணிதம், சமூகம், இயற்பியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நூல்கள் உள்ளன. மேலும் தலைவர்களின் வரலாறுகள், நாடுகளின் சிறப்புகள், சிறுவர் கதைகள், சிறுகதைகள், கவிதைகள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழும் நூல்கள் உள்ளன. மொத்தமாக 1,52,288 நூல்கள் உள்ளன.
இதுதவிர 180 மாத, வார, வாரமிருமுறை என பருவ இதழ்கள் வருகின்றன. இதில் 63 இதழ்கள் போட்டித் தேர்வுக்கென பிரத்யேகமாக வருகின்றன. இந்த புத்தங்களை, சராசரி வாசகர்கள் திருவாரூர் பகுதியில் வாங்க முடியாது. ஏனெனில் இவை சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியவை ஆகும். இதேபோல், 18 நாளிதழ்களும் இங்கு வருகின்றன.
இந்த நூலகத்தில் 15,003 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் தினசரி 300-க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால், பள்ளி மாணவர்களின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும் நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சியும் நடத்தப்படுகிறது. வாசகர் வட்ட கூட்டங்கள், வாசகசாலை கருத்தரங்கம் உள்ளிட்டவையும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. கோடைகாலத்தை முன்னிட்டு, மாணவர்கள் பயன்பெறும் வகையில் கோடை கால பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன. எனவே தினசரி இரவு 8 மணி வரையிலும் நூலகத்தில் வாசகர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த மைய நூலகமானது, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலானோர் நடந்தோ அல்லது மோட்டார் சைக்கிளிலோ வருவது வழக்கம். மாணவர்கள் பெரும்பாலும் சைக்கிளை பயன்படுத்தி நூலகத்துக்கு வருவர்.
ஆனால், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, நூலகம் வரை உள்ள சாலையானது மிகவும் மோசமாக காணப்படுகிறது. சிறு கற்கள் பெயர்ந்து, நடப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. புத்தகங்களின் அருமையையும், கற்பதனால் ஏற்படும் பலன்களைக் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி, குழந்தைகளின் ஆவலைத் தூண்டி, குழந்தைகளுடன் நூலகத்துக்கு வரும் பெற்றோருக்கு, நூலகப் பாதை அசெளகரித்தை ஏற்படுத்துகிறது.
இதனால் குழந்தைகளை மீண்டும் நூலகத்துக்கு அழைத்து வருவதற்கு அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் இருசக்கரவாகனம் அல்லது சைக்கிளில் வருபவர்களின் வாகனங்கள் அடிக்கடி பழுதாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஒருமுறை நூலகத்துக்கு வருவோர், அடுத்தமுறை நூலகம் வருவதற்கு தயங்கும் நிலை உண்டாகிறது.
எனவே நூலகத்துக்குச் செல்லும் பாதையை, சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நூலகத்தை பயன்படுத்தும் வாசகர்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...