பண்ணைக் குட்டைகளில் கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு
By DIN | Published On : 05th May 2019 01:32 AM | Last Updated : 05th May 2019 01:32 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் அருகே நிக்ரா திட்டத்தின்கீழ் தத்தெடுக்கப்பட்ட ராயபுரம் கிராமத்தில், கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு திட்டத்தின்கீழ், 5 விவசாயிகளுக்கு மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டன. பண்ணைக் குட்டைகளில் கட்லா, ரோகு, சாதா கெண்டை, சில்வர் கெண்டை மற்றும் புல் கெண்டை போன்ற மீன் ரகங்கள் விடப்பட்டன.
வேளாண் விஞ்ஞானிகளும், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுமான மு. ராமசுப்ரமணியன், மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் அ.அனுராதா, பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ் நூற்புழுவியல் துறை முதுநிலை ஆராய்ச்சியாளர் வீ. விஜிலா மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் சுரேஷ் ஆகியோர் மீன்களை ஆய்வு செய்தனர். கெண்டை மீன்கள் இயற்கையாகக் கிடைக்கும் பாசிகளை மட்டும் உட்கொண்டு எடையை அதிகரிக்கின்றன. ஆகவே, சரிவிகித உணவு அவசியம். அரிசி உமியும், கடலைப் புண்ணாக்கும் 4:1 என்ற விகிதாச்சாரத்தில் அளித்தால், மீன்கள் நன்கு வளர்ச்சி பெறும் என்பது ஆராய்ச்சி முடிவாகும்.
அசோலா சிறந்த மீன் உணவாகக் கண்டறியப்பட்டது. இவை எல்லாவற்றிலும் மீன்களுக்கான சத்துக்கள் இருந்தாலும், உமி மற்றும் புண்ணாக்கு கலவை சிறப்பான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டது. மீன்களுக்கு உணவளிக்கும்போது அவற்றை பழக்க வேண்டும். ஒரு நாளில் ஒரு நேரத்தில் ஓர் இடத்தில் மீன்களுக்கு உணவிடும்போது அவை பழகிவிடும்.
பரிந்துரைக்கப்பட்ட உணவின் அளவு...
500 கிராம் எடை கொண்ட மீனுக்கு அதன் எடை அளவில் 5 முதல் 6 சதவீத உணவு போதுமானது. ஒரு கிலோ எடை வரை உள்ள மீனுக்கு அதன் எடையில் 3.5 சதவீத உணவளித்தால் போதுமானது. பொதுவாக மீன்களை 800 கிராம் முதல் 12.5 கிலோ வரை வளரவிட்டு வலைவீசியோ அல்லது தண்ணீரை வடித்தோ
பிடிக்கலாம்.
ராயபுரம் கிராமத்தில் ஜெயபாலன் என்ற விவசாயியின் பண்ணைக் குட்டையில் மீன்கள் வேளாண் விஞ்ஞானிகளின் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டன.
இதில் ஒரு மீனின் எடை 7 கிலோ வரை இருந்தது. விஞ்ஞான முறைப்படி வளர்த்தால், ஒரு ஹெக்டேர் மீன் குளத்தில், 4 முதல் 5 டன் வரை மீன்கள் அறுவடை செய்யலாம் என வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...