தபால் வாக்குகள்: "தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் கூட்டு சதி'
By DIN | Published On : 15th May 2019 08:55 AM | Last Updated : 15th May 2019 08:55 AM | அ+அ அ- |

தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் செய்த கூட்டு சதியால் அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியவில்லை என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சிசுந்தரம் குற்றஞ்சாட்டினார்.
திருத்துறைப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழக அரசு ஊழியர்கள் 1 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் தபால் வாக்குகளை பதிவு செய்யவில்லை என்று தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகு கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து அரசு ஊழியர்களை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என கருதி அலைக்கழித்து வாக்களிக்காமல் செய்துவிட்டனர். தவறுகள் அனைத்தையும் தேர்தல் ஆணயத்தின் மீது வைத்துக் கொண்டு அரசு ஊழியர்கள் மீது குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல.
தபால் வாக்களிக்க மே 23-ஆம் தேதி காலை 7 மணி வரை கால அவகாசம் உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் மீது தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகு அக்கரை கொண்டவராக இருந்தால், மே 23-ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் எளிமையாக வாக்களிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றார் .