அண்ணா பல்கலை. துணைவேந்தருக்கு பி.ஆர். பாண்டியன் கண்டனம்
By DIN | Published On : 19th May 2019 09:09 AM | Last Updated : 19th May 2019 09:09 AM | அ+அ அ- |

வேளாண் பொறியியல் பாடப்பிரிவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு அனைத்து விவசாயச் சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:
ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை, உயர்மின் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கண்டித்து விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு மாணவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
தொழில்நுட்ப ரீதியில் புதிய கண்டுபிடிப்புகளையும், சர்வதேச தரத்தில் வேளாண் தொழிலை முன்னேற்றுவதற்கும், மாணவர்களை சென்னை பல்கலைக்கழகம் ஊக்குவிப்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், வேளாண் கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக, உள்நோக்கத்தோடு அதை அழித்து விட்டு மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கைக்கு துணைபோகும் விதமாக வேளாண் பாடப் பிரிவுகளுக்கு தடை விதிக்கப்படுகிறதோ என சந்தேகம் எழுகிறது.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்துவதுடன், வேளாண் மற்றும் பாசனப் பொறியியல் பாடப்பிரிவுகளைத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பி. ஆர். பாண்டியன்.