சாலைப் பணியைத் தடுத்து நிறுத்திய மக்கள்!
By DIN | Published On : 19th May 2019 09:10 AM | Last Updated : 19th May 2019 09:10 AM | அ+அ அ- |

நன்னிலம் அருகே உள்ள நெம்மேலி கிராமத்தில் தரமற்ற வகையில் சாலை போடுவதாகக் கூறி, சாலைப் பணியைப் பொதுமக்கள் சனிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
நெம்மேலி கிராமத்தில் மருதவஞ்சேரி முதல் மான்கண்டமூலை வரை சாலைப் பணி நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெற்றுவரும் இந்த சாலைப் பணியில், முறைகேடு அரங்கேறியதாகக் கூறப்படுகிறது. தரமற்ற முறையில் சாலைப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி, நெம்மேலி கிராம மக்கள் ஓன்றுகூடி, சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் பொதுமக்கள் சார்பில், கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்தியாளரிடம் கூறுகையில், சாலைப் பணி மிகவும் தரமற்ற வகையில் நடைபெற்று வருகிறது. அரசின் எந்தவித விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. சாலையைப் பயன்படுத்தப் போவது பொதுமக்கள் தான். இவ்வாறு தரமற்ற வகையில் போடப்படும் சாலை, சிறிதுகாலம் கூட தாக்குப் பிடிக்காது. வரும் மழைக் காலத்தில் சாலை முற்றிலும் சேதமடைந்து விடும். எனவே தான், தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மோசமான வகையில் நடைபெற்ற பணியைத் தடுத்து நிறுத்தினோம் என்றனர்.