ரமலான்: ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கல்
By DIN | Published On : 19th May 2019 09:10 AM | Last Updated : 19th May 2019 09:10 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் புனிதமாகக் கருதும் ரமலான் மாதம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு காலத்தில் அதிகாலையில் சஹர் எனப்படும் காலை உணவையும், மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு இஸ்திபாஹ் எனப்படும் மாலை உணவையும் கடைப்பிடிப்பது வழக்கம். எனினும், கூத்தாநல்லூரில் நோன்பு மேற்கொள்பவர்களுக்கு எந்தவொரு சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காக தினமும் சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சின்ன சிங்கப்பூர் என அழைக்கப்படும் கூத்தாநல்லூரில், ஏராளமானோர் தாமாக முன்வந்து பல உதவிகள் செய்து வருகின்றனர். இதுகுறித்து பெரிய தெருவைச் சேர்ந்த பொன்னாச்சி கேப்ஸ் உரிமையாளரும், நகர்மன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.எஸ். ஹாஜா நஜ்முதீன் கூறியது:
கூத்தாநல்லூரில் ரமலான் மாதம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு நன்கொடையாளர்களின் உதவியுடன் சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கக் கூடிய ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், தனிமையில் வசிப்பவர்களைக் கண்டறிந்து, அவர்கள் இல்லம் தேடிச்சென்று, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ரமலான் நோன்பு இருக்கும் நேரத்தில், இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, மாற்று சமுதாயத்தினருக்கும் இந்த சஹர் உணவு வழங்கப்படுகிறது. தினமும் 40-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் உதவியுடன் மாலை 4 மணி முதல் உணவு தயாரிக்கப்பட்டு, இரவு 2 மணி வரையிலும் உணவு விநியோகிக்கப்படுகிறது என்றார் அவர்.
இதேபோல், கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாயிலில் நன்கொடையாளர்களின் சார்பில், தினமும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது.