ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஜூனில் இருசக்கர வாகனப் பிரசாரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு
By DIN | Published On : 19th May 2019 09:11 AM | Last Updated : 19th May 2019 09:11 AM | அ+அ அ- |

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து, ஜூன் 5 முதல் 10 வரை இருசக்கர வாகனப் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பது:
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் எண்ணெய் எரிபொருளை எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தொடங்கி நாகை மாவட்டம் கோடியக்கரை வரை, இந்த திட்டம் 6,000 ச கிமீ பரப்பளவில் நிறைவேற்றப்பட உள்ளது. அதுபோல திருவாரூர் மாவட்டத்திலும் திருவாரூர், கோட்டூர், மன்னார்குடி ஒன்றியங்களின் பல்வேறு இடங்களில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில், ஆழ்குழாய் பதிக்கும் பணிகளைத் தொடங்க இருக்கின்றனர். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இந்த திட்டத்தை, காரைக்கால் பகுதியில் அனுமதிக்க மாட்டோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக அரசு எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மீத்தேன் திட்டத்துக்கு தடை விதித்திருந்தார். ஆனால் தற்போது ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் தொடங்கியிருக்கும் இந்த திட்டம் குறித்து, தமிழக அரசு எவ்வித கருத்தும் தெரிவிக்காமலிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
விவசாயத்தை பாதிக்கக்கூடிய இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்கால், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஜூன் 5 முதல் 10 ஆம் தேதி வரை, இருசக்கர வாகனங்கள் மூலம், அனைத்து கிராமங்களுக்கும் சென்று, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டத்தையொட்டி எந்த பகுதியில் குழாய் பதித்தாலும், நேரடியாக களத்துக்குச் சென்று, தடுத்து நிறுத்துவோம் என்றார் அவர்.