இன்றும் மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு
By DIN | Published On : 26th May 2019 12:19 AM | Last Updated : 26th May 2019 12:19 AM | அ+அ அ- |

மத்தியப் பல்கலைக்கழக படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வு ஞாயிற்றுக்கிழமையும் (மே 26) நடைபெறுகிறது.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 14 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு சனிக்கிழமை (மே 25) தொடங்கியது. இந்த நுழைவுத் தேர்வின் மூலம் மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகள் மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டக் கல்வி ஆகியவற்றுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. காலை 9 முதல் 11 மணி வரையும், மதியம் 12 முதல் 2 மணி வரையும் மற்றும் பிற்பகல் 3 முதல் 5 மணி வரையும் 3 பிரிவுகளாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் 4,284 மாணவர்கள் நிகழ்வாண்டு நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர். பல்கலைக்கழகம் நடத்தும் 72 வகையான பாடப் பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து மத்தியப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ. ரகுபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு 60,000 விண்ணப்பங்கள் வந்தன. நிகழ்வாண்டு அதைக் காட்டிலும் 24,000 விண்ணப்பங்கள் அதிகமாக அதாவது 84,000 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. இந்தக் கல்வியாண்டில் புதிதாக 4 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன என அதில்தெரிவித்துள்ளார்.