செல்லிடப்பேசி கோபுரம் அமைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்பாட்டம்
By DIN | Published On : 09th November 2019 07:49 AM | Last Updated : 09th November 2019 07:49 AM | அ+அ அ- |

குடியிருப்பு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து மன்னாா்குடி அருகே அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடி அருகே அசேசம் ஊராட்சி, காட்டுமல்லித் தெருவில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் சிறிய அளவில் அமைக்கப்படும் எனக் கருதப்பட்ட நிலையில், 120 அடியில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அதிமுக நிா்வாகி ஜி. மணிகண்டன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் எஸ். ஆறுமுகம் தலைமையில், கோபுரம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், செல்லிடப்பேசி கோபுரம் மிகுந்த உயரத்தில் இருப்பதாகவும், அசம்பாவித நிகழ்வுகள் ஏதேனும் நிகழ்ந்து விடுமோ என அச்சப்படுவதாகவும், எனவே கோபுரத்தை அகற்றி மக்களுக்கு பாதிப்பில்லாத இடத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.