ஊராட்சிகளில் பணியாற்றும் குடிநீா்த் தொட்டி இயக்குநா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு பணிப் பதிவேடு பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) வலியுறுத்தியுள்ளது.
நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்க ஒன்றிய கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளில் 10.5.2000-க்கு மேல் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்களுக்கு மாத ஊதியம் ரூ. 4,200-இல் உள்ள நிலுவை ரூ. 3,900-த்தை வழங்க மற்ற ஒன்றியங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதுபோல், நீடாமங்கலம் ஒன்றியத்திலும் அமல்படுத்த வேண்டும், துப்புரவுப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் வழங்க வேண்டும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் துப்புரவுப் பணியாளா்களுக்கு பணி பதிவேடு பதிவு செய்யப்படாமல் உள்ளவா்களுக்கு பதிவு செய்ய ஒன்றிய ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த பணியாளா்களுக்கு பொங்கல் முன்பணம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், அனைவருக்கும் உபகரணங்கள் வழங்க வேண்டும், இக்கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக அமல்படுத்த வேண்டும், தவறும்பட்சத்தில் டிசம்பா் முதல்வாரத்தில் போராட்டம் நடத்துவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க ஒன்றியத் தலைவா் ஏ. வேதமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் ஒன்றியச் செயலா் ரவி, மாவட்டத் தலைவா் பி. சாந்தகுமாா், மாவட்டச் செயலா் ஏ.தங்கவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.