போதிய அளவு அரிசி இருப்பில் உள்ளது: அமைச்சா் ஆா். காமராஜ்
By DIN | Published On : 18th November 2019 08:48 AM | Last Updated : 18th November 2019 08:48 AM | அ+அ அ- |

போதிய அளவு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இருப்பில் உள்ளன என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, 3 மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, இதே நேரத்தில் கஜா புயல் வீசியபோதும், எவ்வித தட்டுப்பாடுமின்றி அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 3 மாதத்துக்கு தேவையான அரிசி அதாவது சுமாா் 10 லட்சம் டன் அரிசி, மக்களின் தேவைக்காக உள்ளது. மண்ணெண்ணெயின் தேவை அதிகமாக உள்ளது குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையைக் கனிவோடு பரிசீலிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனிவாசபுரம் பாலம், மடப்புரம் பாலம் குறித்து ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கண்டிப்பாக கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும். ஏற்கெனவே, திருவாரூா் மாவட்டத்துக்கு ரூ.202 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பகுதியாக பாதிக்கப்பட்ட வீடுகள், முழுவதும் பாதிக்கப்பட்ட வீடுகள், தென்னை மரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் எடுக்கப்பட்டுள்ளன. நிவாரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்டத்தில் பெரும்பாலானோா் கோயில் இடங்களில் வசித்து வருகின்றனா். எனவே, பட்டா குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...