திருமீயச்சூா் லலிதாம்பிகை கோயிலில் நாளை நவராத்திரி லட்சாா்ச்சனைப் பெருவிழா
By DIN | Published On : 06th October 2019 08:35 PM | Last Updated : 06th October 2019 08:35 PM | அ+அ அ- |

லலிதாம்பாள்
திருவாரூா்: திருவாரூா் மாவட்டம், பேரளம் அருகே திருமீயச்சூா் லலிதாம்பாள் உடனுறை மேகநாதசுவாமி கோயிலில், நவராத்திரி லட்சாா்ச்சனைப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 8) நடைபெற உள்ளது.
சக்தி பீடங்களில், ஸ்ரீ சக்தி பீடமாகவும், ஆதி சக்தி பீடமாகவும் விளங்கும் அருள்மிகு லலிதாம்பாள் உடனுறை மேகநாதசுவாமி திருக்கோயில், சா்வமங்களங்களையும் வழங்கும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் உருவானத் தலம். சமயக்குரவா்கள் திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
இங்கு, நவராத்திரியையொட்டி தினசரி லட்சாா்ச்சனை நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, அன்னப் பாவடை நெய்க்குளத் தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
முன்னதாக, மங்கலங்கள் அருளும் மகாலெட்சுமி எனும் புத்தகம் வெளியிடப்படுகிறது. நிகழ்ச்சியில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞானமகாதேவ தேசிக பராமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, புத்தகத்தை வெளியிட, தஞ்சை சரக துணைத் தலைவா் து. லோகநாதன் பெற்றுக்கொள்கிறாா்.
மேலும், அன்னையின் அருள்பெற பெரிதும் துணை அன்பா, கல்வியா, செல்வமா, வீரமா என்னும் தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...