தேசிய ஊட்டச்சத்து மாதம்: செப்.13-இல் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
By DIN | Published On : 11th September 2019 07:12 AM | Last Updated : 11th September 2019 07:12 AM | அ+அ அ- |

தேசிய ஊட்டச்சத்து மாதம் குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதத்தில், செப்டம்பர் 13-இல் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெண்கள், குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், செப்டம்பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்படும் விவரம் அனைத்து கிராமப்புற மக்களையும் சென்றடையும் வகையில், செப்டம்பர் 13-ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராமசபைக் கூட்டத்தில் அனைத்து பள்ளிக் கட்டடங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை வசதி உள்ளதை உறுதி செய்தல், அங்கன்வாடி மையங்களைப் புனரமைப்பு செய்தல் மற்றும் தனிநபர் சுகாதாரம் காத்திடும் பொருட்டு சாப்பாட்டிற்கு முன்பும், பின்பும் கைகளைக் கழுவி சுத்தம் செய்தல் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்து விவாதிக்கப்படவும் உள்ளது.
மேலும், கிராமசபைக் கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பான உறுதிமொழியும் ஏற்கப்பட உள்ளது. எனவே தேசிய ஊட்டசத்து தொடர்பாக செப்டம்பர் 13-இல் நடைபெற உள்ள சிறப்பு கிராமசபைக்ட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், சமுதாய தலைவர்கள், ஊர் பெரியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளடக்கிய அனைத்து தரப்பு பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.