பொறியாளர் நினைவு விருது வழங்கும் விழா
By DIN | Published On : 11th September 2019 07:08 AM | Last Updated : 11th September 2019 07:08 AM | அ+அ அ- |

நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நிறுவனர் பொறியாளர் மு.சுந்தர்ராஜன் நினைவு விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
வீதிவிடங்கன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சக்திவேல், துணைத் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அண்டகுடி கணபதி, தாயுமானவன் என்ற நூலை வெளியிட, முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் ராமசாமி பெற்றுக்கொண்டார்.
சேலம் பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை ரகமத் பீவி விழா பேருரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற 163 மாணவ, மாணவிகளுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக பணியாற்றிய அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 15 பேருக்கு பொறியாளர் மு.சுந்தரராஜன் நினைவு விருது வழங்கப்பட்டது. அதம்பாவூர் ராமன், நன்னிலம் சந்தானகுமார், நன்னிலம் ஜெயசீலன் ஆகிய மூவருக்கும் சிறந்த சமுதாயப் பணிக்கான விருதும், விளாகம் முத்துக்குமாரசாமி, அதம்பாவூர் நடராஜன் ஆகியோருக்கு சிறந்த சன்மார்க்க பணிக்கான விருதும், நல்லாசிரியர் மா.அருணாச்சலம், நல்லாசிரியர் த.பாலச்சந்திரன், நல்லாசிரியர் ராமலிங்கம், ஓவிய ஆசிரியர் பாலகேசவன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
வள்ளலார் குருகுல கல்வி நிறுவனங்களின் செயலாளர் பாரி வரவேற்றார். சென்னை எம்.ஏ.அறநிலைய அறங்காவலர் செந்தில் நன்றி தெரிவித்தார்.