தொழில்போட்டி: மகன், மருமகன் உதவியுடன் கணவரை கொலை செய்த பெண்
By DIN | Published On : 29th September 2019 06:09 AM | Last Updated : 29th September 2019 06:09 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தொழில் போட்டி காரணமாக கணவனைக் கொலை செய்த மனைவி, மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (43). மீனவரான இவர் தரங்கம்பாடி பிரதான சாலையில் மேடை அலங்காரக் கடை (டெக்கரேஷன்) நடத்தி வந்தார். இவரது மனைவி விஜயலெட்சுமி (40). இத்தம்பதிக்கு மோனிஷா (21), என்ற மகளும், வருண் (19), விமல் (17) என்ற மகன்களும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.
இதன்காரணமாக தனது மகன்கள், மகளுடன் விஜயலெட்சுமி அதே பகுதியில் மற்றொரு மேடை அலங்காரக் கடை நடத்தி வந்துள்ளார். எனினும், இக்கடையில் சரிவர வியாபாரம் நடைபெறவில்லையாம். இந்நிலையில், அண்மையில் மதியழகனுக்கு ரூ.1.25 லட்சத்துக்கு மேல் ஆர்டர் வந்துள்ளது. இதனால் விஜயலெட்சுமிக்கு கணவர் மீது பொறாமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் வெள்ளக்கோயில் என்ற இடத்தில் முகம் சிதைந்த நிலையில் மதியழகன் சடலமாகக் கிடந்தார். அவரது சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, தனது மகனின் சாவுக்கு மருமகள் விஜயலெட்சுமிதான் காரணமாக எனக் கூறி, மதியழகனின் தாயார் வள்ளியம்மை போலீஸில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், விஜயலெட்சுமியின் சதித் திட்டத்தின் மூலமே மதியழகன் கொல்லப்பட்டது தெரியவந்தது.
அதாவது, மதியழகன் தொழிலில் தனக்கு போட்டியாக வந்ததைப் பொறுத்துக் கொள்ள இயலாத விஜயலெட்சுமி, தனது இளைய மகன் விமலிடம் இரும்புக் கம்பியைக் கொடுத்து அவனது தந்தையைக் கொலை செய்ய அனுப்பியுள்ளார்.
இதைத்தொடர்ந்து விஜயலெட்சுமியின் அண்ணன் மகன் சத்ரியன் (24) இருசக்கர வாகனத்தை ஓட்ட, பின்னால் தலைக்கவசம் அணிந்து, தந்தையைப் பின்தொடர்ந்து சென்ற விமல், வெள்ளக்கோயில் சுடுகாடு அருகில் ஆள்நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி, இரும்புக் கம்பியால் மதியழகனின் பின்புறம் தாக்கியுள்ளார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். தொடர்ந்து, மதியழகன் இறந்ததை உறுதிப்படுத்திய பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பியது தெரியவந்தது.
இதையடுத்து, விஜயலெட்சுமி, அவரது மகன் விமல், மருமகன் சத்ரியன் ஆகிய மூவரையும் கைது செய்த பொறையாறு போலீஸார், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.