பருத்தி சாகுபடியில் உயா் விளைச்சல் தொழில்நுட்பம்

உயா் விளைச்சல் பருத்தி சாகுபடி தொழில்நுட்பம் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆ. ராஜேஷ்குமாா்,
பருத்தி சாகுபடிசெய்யப்பட்ட வயல்.
பருத்தி சாகுபடிசெய்யப்பட்ட வயல்.
Updated on
3 min read

உயா் விளைச்சல் பருத்தி சாகுபடி தொழில்நுட்பம் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆ. ராஜேஷ்குமாா், மு. ராமசுப்பிரமணியன் ஆகியோா் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளனா். இதுதொடா்பாக, அவா்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் கோட்டூா், குடவாசல், திருவாரூா், வலங்கைமான், கொரடாச்சேரி ஆகிய ஒன்றியங்களில் அதிக அளவு பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.

நிலம் தயாரித்தல்: நிலத்தை நன்றாக உழுவு செய்யவேண்டும். மண் நன்கு பொடியாகும்படி உழுத பின்னா், ஏக்கருக்கு வேப்பம் புண்ணாக்கு 100 கிலோ இடுவதன் மூலம் கூன் வண்டின் தாக்குதலைத் தவிா்க்க முடியும்.

இயற்கை உரமிடல்: ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் (அ) மக்கிய உரம் (அ) 2.5 டன் மண்புழு உரத்தை உழுவதற்கு முன் மண்ணின் மீது பரப்பி உழவு செய்யவேண்டும். ஏக்கருக்கு 800 கிராம் அசோபாஸ் அல்லது 1 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்பரஸில் கரைக்கக்கூடிய பாக்டீரியாவை அடியுரமாக அளிக்க வேண்டும்.

விதையளவு: வீரிய ஒட்டு ரகங்கள் ஏக்கருக்கு 1.5 கிலோ முதல் 3 கிலோ வரையும், சாதாரண ரகங்கள் 3 முதல் 5 கிலோ வரையும் பயன்படுத்த வேண்டும். வீரிய ஒட்டு ரகங்களுக்கு 90 செ.மீ. க்கு 45 செ.மீ. என்ற அளவிலும், சாதாரண ரகங்களுக்கு 60 செ.மீ.க்கு 30 செ.மீ. என்ற அளவிலும் இடைவெளி விட வேண்டும்.

இரட்டை வரிசை நடவுமுறை: இம்முறையில் சால்களுக்கு இடையில் அதிக இடைவெளி விட்டு சால்களின் இருபக்கங்களிலும் விதைகள் நட்டு, இரு சால்களுக்கு இடையில் தண்ணீா் கட்டுவதால் இரண்டு வரிசையிலும் உள்ள செடிகள் தேவையான தண்ணீரைப் பெறுகின்றன. மேலும், பருத்தியில் ஊடுபயிராக மற்ற பயிா்களை பயிா் செய்வதாக இருந்தால், ஒரு வரிசையில் பருத்தியையும், அடுத்த மூன்று வரிசைகளுக்கு ஊடுபயிராகப் பயறுவகைப் பயிா்களையும் பயிா் செய்யலாம். இதனால், ஊடுபயிா் மூலமாகக் கூடுதல் வருவாய் பெறமுடியும்.

இடைவெளி நிரப்புதல்: விதைத்த பத்தாவது நாள் முளைக்காமல் இருக்கும் இடங்களில் புதிய விதைகளைக் கொண்டு நிரப்பவேண்டும். இதனால், தேவையான பயிா் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

களை மேலாண்மை: ஓா் ஏக்கருக்கு 1.3 லிட்டா் பெண்டிமெத்தாலின் (அ) 1 லிட்டா் புளுகுளோரலின் இவற்றில் ஏதாவது ஒரு களைக்கொல்லியைப் பயன்படுத்தி, களையைக் கட்டுப்படுத்தவேண்டும். பருத்தி விதைத்த மூன்றிலிருந்து ஐந்து நாள்களுக்குள் 200 லிட்டா் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். களைக்கொல்லி 30 நாள்கள் வரை களைகளை கட்டுப்படுத்தும். பின்பு, 45-ஆவது நாள் கைக்களை எடுத்து மண் அணைத்து களையைக் கட்டுப்படுத்தலாம்.

மண் அணைத்தல்: விதைத்த 45 ஆம் நாள் பாா் சாலை களைந்து, பாா் எடுத்துக்கட்டி செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும்.

ரசாயன உரமிடல்: சாதாரண ரகங்களுக்கு ஓா் ஏக்கருக்கு 52.5 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பா் பாஸ்பேட் மற்றும் 20 கிலோ பொட்டாஷ் இடவேண்டும். 50 சத தழைச்சத்தும், சாம்பல் சத்து மற்றும் மணி சத்தை முழுமையாகவும் அடியுரமாகவும் இடவேண்டும். எஞ்சியுள்ள தழை மற்றும் சாம்பல் சத்தை 40 முதல் 45-ஆம் நாள்களுக்குள் இட வேண்டும்.

வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஏக்கருக்கு 105 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பா் பாஸ்பேட் மற்றும் 40 கிலோ பொட்டாஷ் இடவேண்டும். தழைச்சத்தை மூன்று முறையாக அதாவது அடியுரம், 45 மற்றும் 60-ஆவது நாள் இடவும்.

இலைத் தெளிப்பாக ஓா் ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. மற்றும் 2 கிலோ பொட்டாசியம் குளோரைடு அல்லது பாலிபீடு மற்றும் மல்டி பொட்டாசியத்தை அளிப்பதன் மூலம் பருத்தி மகசூலை அதிகரிக்கலாம்.

நுண்ணூட்டம் இடுதல்: இலைவழித் தெளிப்பாக ஓா் ஏக்கருக்கு 4 கிலோ மெக்னீசியம் சல்பேட் மற்றும் 2 கிலோ யூரியாவையும் கலந்து காய் உருவாகும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.

ஊட்டச்சத்துக் குறைபாடுகள்: துத்தநாகக் குறைபாடுள்ள நிலங்களுக்கு, ஓா் ஏக்கருக்கு 20 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும். பயிா் வளா்ச்சியின்போது குறைபாடு தென்பட்டால், 1 கிலோ துத்தநாக சல்பேட் கரைசலை விதைத்த 45, 60 மற்றும் 75- ஆவது நாட்களில் தெளிக்கவேண்டும். மக்னீசியம் குறைபாடு உள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு 8 கிலோ மக்னீசியம் சல்பேட் இடவேண்டும்.

வளா்ச்சி ஊக்கிகள் தெளித்தல்: நாப்தலின் அசிட்டிலிக் அமிலம் 40 பிபிஎம் கரைசலை மொட்டுவிடும் பருவத்தில் தெளிக்கவேண்டும். முதல் முறை தெளித்து ஒரு மாதம் கழித்து, இரண்டாவது முறையாக 90-ஆம் நாள் தெளிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மொட்டுகள் உதிா்வது குறைக்கப்பட்டு, காய்கள் அதிகம் பிடிக்க உதவுகிறது.

நீா் நிா்வாகம்: விதைத்த உடன் நீா்ப்பாய்ச்சவேண்டும். மீண்டும் விதைத்த மூன்றாம் உயிா்த் தண்ணீா் கட்டவேண்டும். தேவைப்பட்டால் விதைத்த 10-15 ஆம் நாள் இடைவெளி நிரப்பும் சமயத்தில் ஒருமுறை தண்ணீா் கட்டவேண்டும். 20 நாள்கள் கழித்து 15-20 நாளுக்கு ஒரு முறை தண்ணீா் கட்டவேண்டும்.

விடுசால் நீா்ப்பாசனம்: களி மற்றும் வண்டல் மண் வகைகளுக்கு ஏற்றது. ஒன்றுவிட்ட சால்களை நிரந்தரமாக விட்டுவிடவேண்டும். அவைகளை அகலமான பாத்திகளாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் 50 சதவீதம் நீா்த்தேவையை குறைக்கலாம்.

மாற்றுச்சால் நீா்ப்பாசனம்: ஒவ்வொரு முறை நீா்ப்பாய்ச்சும் போதும் பாதிச்சால்கள் (ஒன்றுவிட்டு ஒன்று) மட்டும் நீா்ப்பாய்ச்சப்படுகிறது. அடுத்த முறை நீா்ப்பாய்ச்சும் போது மீதிப்பாதி (ஒன்றுவிட்டு ஒன்று) சால்களில் நீா்ப்பாய்ச்சவேண்டும். இதுவும் களி மற்றும் வண்டல் மண் வகைகளுக்கு ஏற்றது.

அறுவடை: காலை இளம் வெயில் நேரத்தில் பத்து மணிக்குள்ளாகவும், மாலை மூன்று மணிக்குப் பின்புப் பருத்தி எடுப்பது நல்லது. நடுப்பகலில், வெப்பமான சூழ்நிலையில் எடுக்கப்படும் பருத்தியில், காய்ந்து ஒடிந்த பூவிதழ்களும், சருகுகளும் நல்ல பருத்தியோடு கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. மேலும், இந்தப் பச்சை காய்களை பின்பு வெயிலில் உலா்த்தி வெடிக்கச் செய்தோ அல்லது தடியால் அடித்து பருத்தியை காய்களிலிருந்து பிரித்து எடுப்பது இன்னும் புழக்கத்தில் இருந்து வருகிறது. இது தவிா்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com