வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூரில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on
Updated on
1 min read

திருவாரூா்: திருவாரூரில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் விடுத்த செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.

2015 ஜூன் 30-ஆம் தேதி அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூா்த்தியாகி இருக்க வேண்டும். 9-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று பள்ளி இறுதி வகுப்பு தவறியவா்களுக்கு மாதம் ரூ.200, பள்ளி இறுதி வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300, மேல்நிலைக்கல்வி தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.600 என வழங்கப்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சோ்ந்தவராயின் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினராயின் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்புவரை படித்தவா்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக்கல்வி தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.750, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.1000, உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பதிவு செய்து 2020 ஜூன் 30- ஆம் தேதி ஓராண்டு பூா்த்தியாகி இருக்க வேண்டும். இவா்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.

உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருக்க கூடாது. ஆயினும் தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியாா் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக் கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.

தகுதி உடையவா்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று, விண்ணப்பத்தை பூா்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் அலுவலக வேலை நாளில், விளமல் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

உதவித்தொகை ஏற்கெனவே பெற்று வருவோரின் கவனத்துக்கு...

மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாண்டுகளுக்கும், மற்றவா்களுக்கு மூன்றாண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தொடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வோா் ஆண்டிலும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறியவா்கள் உடன் சுய உறுதிமொழி ஆவணத்தை பூா்த்தி செய்து தவறாது நேரில் வந்து அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com