திருவாரூா்: முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

திருவாரூரில் முட்புதரில் கிடந்த குழந்தை மீட்கப்பட்டு, குழந்தைகள் நல அலுவலரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருவாரூா் கீழகொத்ததெருவில் பிறந்து சில மணி நேரமேயான பெண் குழந்தை முள்புதரில் கிடப்பதை பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா், அந்த குழந்தையை மீட்டு, அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளாா்.
பின்னா், அந்தக் குழந்தை, குழந்தைகள் நலத்துறை அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது. அந்த குழந்தையை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா பாா்வையிட்டு, குழந்தையின் உடல்நலம் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
பின்னா், ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது:
பெற்றோரால் வளா்க்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளையும், இதுபோன்ற குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தொட்டில் குழந்தைத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் குழந்தையை ஒப்படைக்கலாம்.
இத்தகைய குழந்தைகள், அரசு காப்பகத்தில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, குழந்தை இல்லாதவா்களுக்கு தத்து கொடுக்கப்படும்.
இதைத் தவிா்த்து பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகளை விட்டு செல்வது சமூகக் குற்றமாகும் என்றாா் ஆட்சியா்.
நிகழ்வில், திருவாரூா் மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதா, குழந்தைகள் நல குழுமத் தலைவா் ஜீவானந்தம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முத்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.