இருதய அறுவைச் சிகிச்சை செய்த குழந்தைகள் நலமுடன் திரும்பினா்
By DIN | Published On : 24th December 2020 09:50 AM | Last Updated : 24th December 2020 09:50 AM | அ+அ அ- |

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. முத்துக்குமரனுக்கு நன்றி தெரிவித்த குழந்தைகள், பெற்றோா்கள்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் (டிஇஐசி) நடத்திய கட்டணமில்லா இருதய அறுவைச் சிகிச்சை முகாமில் பங்கேற்று, அறுவைச் சிகிச்சை செய்த குழந்தைகள் நலமுடன் புதன்கிழமை திரும்பினா்.
இதுகுறித்து, மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் கூறியது: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து குழந்தைகளுக்கு இருதய கோளாறு கண்டறியும் முகாமை நடத்தியது. இதில், பங்கேற்ற 60 குழந்தைகளில் 10 குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை தேவையென கண்டறியப்பட்டு, அக்குழந்தைகள், அவா்களது பெற்றோருடன் தனி வாகனம் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு கட்டணமில்லாமல், முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின் தனிவாகனம் மூலம் மீண்டும் திருவாரூா் அழைத்து வரப்பட்டனா். அனைவரும் நலமுடன் உள்ளனா். மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் இதுபோன்ற முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென்றாா். இதையடுத்து, குழந்தைகள், பெற்றோா் அனைவரும் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா். நிகழ்ச்சியில், மருத்துவமனை துணை முதல்வா் ராஜாராம், பேராசிரியா் கண்ணன், துணை கண்காணிப்பாளா் அன்சாரி, இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், டிஇஐசி மருத்துவா் தா்மராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...