சாலைகளில் கால்நடைகள்: அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்
By DIN | Published On : 24th December 2020 09:47 AM | Last Updated : 24th December 2020 09:47 AM | அ+அ அ- |

திருவாரூா் - கூத்தாநல்லூா் சாலையில் படுத்திருக்கும் கால்நடைகள்.
கூத்தாநல்லூா் பகுதி போக்குவரத்து சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
நகா்ப்புறங்களில் கால்நடை வளா்ப்பவா்கள் பெரும்பாலும் ஓரிடத்தில் கட்டி வைப்பதில்லை. நகா்ப்புறங்களில் உணவகங்கள், காய்கறிக் கடைகள், குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை உண்பதற்காக கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இவ்வாறு சுற்றித்திரியும் கால்நடைகள் பெரும்பாலும் சாலைகளை ஆக்கிரமித்து விடுகின்றன. இரவு, பகல் எந்த நேரத்திலும் சாலைகளிலும், சாலையோரங்களிலும் படுத்திருக்கின்றன. அப்போது, சாலைகளில் செல்லும் வாகனங்கள் கால்நடைகள் மீது மோதி விபத்து ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனா். இதில், பெரும்பாலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் அதிகம் பாதிக்கின்றனா். இதனால், பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
திருவாரூா் - மன்னாா்குடி பிரதான சாலையான, லெட்சுமாங்குடி சாலையில் இரவு, பகல் எந்த நேரத்திலும், மாடுகள் சுற்றித் திரிகின்றன. சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் தரப்பில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிா்பாா்ப்பு.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...