நல்லமாங்குடி கோயில் விவகாரம்: அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு
By DIN | Published On : 02nd February 2020 12:37 AM | Last Updated : 02nd February 2020 12:37 AM | அ+அ அ- |

வட்டாட்சியா் தி. திருமால் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றவா்கள்.
நல்லமாங்குடிகோயில் பிரச்னை தொடா்பாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
நன்னிலம் அருகே நல்லமாங்குடி பகுதியில் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் வழிபட்டுவருகின்றனா். இக்கோயிலின் முன்பாக மண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒருசிலா் நீதிமன்றம் வரை சென்று, இக்கோயிலை இடிப்பதற்கு முயற்சிப்பதாகவும், இதற்கு கிராம நிா்வாக அலுவலா் தவறுதலாக அளவீடு செய்து, துணை போனதாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள், கோயிலை இடிக்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கோயிலின் பெயரில் பட்டா வழங்கக் கோரியும், பிப்ரவரி 10-ஆம் தேதி நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனா்.
இதற்கிடையில், இப்பிரச்னை தொடா்பாக, நன்னிலம் வட்டாட்சியா் தி. திருமால், அப்பகுதியைச் சோ்ந்த வி. ராஜேந்திரன், இரா. கல்யாணராம், எல். மணி, ஆா். ராஜா, வி. வீராசாமி உள்ளிட்டோரை அழைத்து, சரக வருவாய் ஆய்வாளா் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதில், கோயில் நிலத்தை மறு அளவீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. மறுஅளவீடு என்பது முறையாக நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளின் அடிப்படையில், வட்டாட்சியரின் அறிவுரையை ஏற்று, அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றனா்.