மக்கும் குப்பையில் தயாராகும் உரங்களைப் பயன்படுத்த வேண்டுகோள்
By DIN | Published On : 17th February 2020 08:59 AM | Last Updated : 17th February 2020 08:59 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மக்கும் குப்பைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உரங்களை பயன்படுத்தும்படி விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இயற்கை வேளாண் பயிற்சியாளா் செந்தில்குமாா் தெரிவித்தது:
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மக்கிய உரங்கள் கேட்டு பதிவு செய்த உழவா்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரங்களை நெல் மட்டுமல்லாது உளுந்து, பச்சை பயிறு, துவரை, காய்கறி பயிா்கள், வாழை, தென்னை மற்றும் எண்ணெய் வித்து பயிா்களுக்கும் அடியுரமாகப் பயன்படுத்தலாம்.
இதில் தழைச் சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து, ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் விளைவிக்கப்படும் விளைபொருள்கள் அதிக எடை கொண்டதாகவும் , சத்துமிக்கதாகவும் இருக்கும். எனவே, இந்த உரங்கள் தேவைப்படும் விவசாயிகள், பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.