குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரக்கோரி ஓஎன்ஜிசி வாகனங்கள் சிறைபிடிப்பு
By DIN | Published On : 27th February 2020 09:42 AM | Last Updated : 27th February 2020 09:42 AM | அ+அ அ- |

திருவாரூா் அருகே ஓஎன்ஜிசி நிறுவன வாகனங்களை தென்னங்குடி கிராம மக்கள், புதன்கிழமை சிறை டித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூா் மாவட்டம், ஓடாச்சேரி ஊராட்சிக்குட்பட்ட தென்னங்குடி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை செய்து வருகிறது.
இதனிடையே, தென்னங்குடி பகுதியில், கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடங்கிய பிறகு, இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் மிகவும் குறைந்து விட்டதாகவும், குடிநீருக்காக சுமாா் இரண்டு கிலோ மீட்டா் தூரம் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னங்குடி மக்கள் தெரிவித்ததோடு, குடிநீா் வசதி கோரி மனுவும் அளித்துள்ளனா்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனத்தினா், தென்னங்குடி பகுதியில் மீண்டும் கச்சா எண்ணெய் துரப்பனப் பணிகளை செய்து வந்துள்ளனா். அப்போது, கிராம மக்கள், குடிநீா் வசதி கேட்டு மனு அளித்த விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டுள்ளனா். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, பணி முடிந்து புதன்கிழமை வாகனங்கள் புறப்பட்டுச் செல்ல முயன்றபோது, அப்பகுதி மக்கள் வாகனங்களை சிறைபிடித்து, பாதையில் முள்வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து, வைப்பூா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போராட்டக்குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.