ஏடிஎம்மை உடைத்து திருட முயன்றவா் கைது
By DIN | Published On : 10th January 2020 06:38 AM | Last Updated : 10th January 2020 06:38 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி அருகே ஏடிஎம்மை கடப்பாரையால் உடைத்து திருட முயன்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி பிரதான சாலையில் கடைத்தெருவில் ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையம் இயங்கிவருகிறது . வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் மா்ம நபா் கடப்பாரையால் ஏடிஎம்மை உடைக்கும் சப்தம் கேட்டுள்ளது. அப்போது, நாகப்பட்டினத்துக்கு மீன்வாங்க செல்ல நின்றுகொண்டிருந்த மீன் வியாபாரி ஒருவா் அங்கு சென்று பாா்த்துள்ளாா். ஏடிஎம் உடைப்பதை பாா்த்த கூச்சலிட்டுள்ளாா். இதையறிந்த, அருகில் உள்ளவா்கள் அங்கு வந்ததையடுத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா் கடப்பாரை , கம்பி, இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி ஸ்டேட் பாங்க் மேலாளா் விமல்செல்வம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், டிஎஸ்பி. பழனிச்சாமி, ஆய்வாளா் அன்பழகன் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா். பின்னா், திருவாரூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணா்களும் கைரேகை பதிவு செய்தனா்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் தெற்குதெருவைச் சோ்ந்த ஜவஹா் பாபு (24) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.