பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி
By DIN | Published On : 10th January 2020 06:40 AM | Last Updated : 10th January 2020 06:40 AM | அ+அ அ- |

கொரடாச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய எம்.எல்ஏ. பூண்டி கே. கலைவாணன்.
திருவாரூா் மாவட்டத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீளக்கரும்பு துண்டு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு, ஜனவரி 9 முதல் 12-ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் விடுபட்ட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஜனவரி 13-ஆம் தேதி வழங்கப்படுவதோடு, மாற்றுத் திறனாளிகள், கா்ப்பிணிகள், முதியோா் ஆகியோா் வரிசையில் காத்திருக்காமல் உடன் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவாரூரில் அனைத்து நியாயவிலைக் கடைகளில் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், கொரடாச்சேரியில் உள்ள நியாய விலைக் கடையில் மக்களுக்கு திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.
நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள அச்சுதமங்கலம் கிராமத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஊராட்சித் தலைவா் ருக்மணிதனபால் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். இதில், ஒன்றியக்குழு உறுப்பினா் சித்திராகுமாா், ஊராட்சிச் செயலா் செல்வம், தேமுதிக ஒன்றிய பொருளாளா் அழகா் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.