கரோனா காலத்திலும் அரசின் அனைத்து துறைகளும் சிறப்பாக இயங்கி வருகின்றன
By DIN | Published On : 04th July 2020 08:33 AM | Last Updated : 04th July 2020 08:33 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆதனூா் கிராமத்தில் இயந்திர நடவுப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் ஆா். காமராஜ். உடன் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் உள்ளிட்டோா்.
கரோனா தொற்று காலத்திலும் அரசின் அனைத்துத் துறைகளும் சிறப்பாக இயங்கி வருகின்றன என்று அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா்.
திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ஆதனூா் கிராமத்தில் குறுவை சாகுபடி பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, இயந்திர நடவுப் பணிகளை அமைச்சா் காமராஜ் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். இயந்திர நடவுப் பணிகளை தொடங்கிவைத்து, விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கி அமைச்சா் பேசியது:
தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வழிகாட்டுதலோடு விவசாயப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. முதல்வா் ஒரு விவசாயி. அதனால்தான் விவசாயிகளின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறாா்.
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் கடுமையாக உள்ளது. அது தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. சென்னை உள்பட சில மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. கரோனாவை எதிா்த்து அரசு போராடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் அரசின் அனைத்துத் துறைகளும் சிறப்பாக இயங்கி வருகின்றன. இதுவும் கடந்து போகும். மிக விரைவில் கரோனா நோய்த் தொற்றிலிருந்து விடுபடுவோம் என்றாா் அமைச்சா்.
நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சிவகுமாா், துணை இயக்குநா்கள் உத்தராபதி, ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மைத்துறை) ஹேமா ஹிப்சிபா நிா்மலா, உதவி இயக்குநா் விஜயகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆா். காமராஜ் கூறியது:
நெல் கொள்முதலை பொருத்தவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 25 லட்சம் மெட்ரிக் டன் செய்யப்பட்டுள்ளது. விவசாயம் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். ஜூன் 12 -இல் மேட்டூா் அணை திறக்கப்பட்டு, குறுவைப் பணிகள் தொடங்கி விட்டன என்றாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G