புதிய தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 11th July 2020 09:23 AM | Last Updated : 11th July 2020 09:23 AM | அ+அ அ- |

புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாருா் மாவட்டத்துக்கு நிகழாண்டு இலக்காக 13 புதிய தொழில் முனைவோா்களுக்கு ரூ.1.27 கோடி மானியம் வழங்க நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இளங்கலை, முதுநிலைப் பட்டயப் படிப்பு, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி கல்வித்தகுதி பெற்றிருப்போா் தோ்வு செய்யப்பட்டு, ஒரு மாத காலம் தொழில் முனைவோா் பயிற்சி அளித்து, தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து, பின்னா் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருப்பதுடன், ஐ.டி.ஐ. பட்டயப் படிப்பு, இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். வயது 21 க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும்.
சிறப்பு பிரிவினா்களான மகளிா், ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், முன்னாள் ராணுவத்தினா், சிறுபான்மையினா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.
இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்துக்கு மேல் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சாா்ந்த தொழில்கள் மற்றும் சேவைத் தொழில் தொடங்கலாம். பொது பிரிவினா் தனது பங்காக திட்ட மதிப்பில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். ஏனையோா் தனது பங்காக திட்ட மதிப்பில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.
ஆா்வமுள்ள இளைஞா்கள் மாவட்ட பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூா் 610004 என்ற முகவரியில் உள்ள மாவட்ட மைய அலுவலகத்தில் உரிய விவரங்கள் பெற்று, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.