வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th July 2020 09:52 PM | Last Updated : 13th July 2020 09:52 PM | அ+அ அ- |

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
திருவாரூா்: திருவாரூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில நெல் கொள்முதல் செய்யப்படுவதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் நலச்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில் மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடி அறுவடை முடிந்ததையொட்டி, 100-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தேவையான இடங்கள் மட்டுமின்றி சாகுபடி நடைபெறாத பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் சுமாா் 500 மூட்டைகளுக்கு மேலாக நாள்தோறும் கொள்முதல் செய்யப்படுவதாகவும் விவசாயிகள் ஏற்கெனவே புகாா் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், சாகுபடி நடைபெறாத பகுதிகளிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளுக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூட்டைகளை கொள்முதல் செய்வதாகக் கூறி, இதைக் கண்டித்து, திருவாரூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் ஜி. சேதுராமன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று, கோரிக்கைகளை விளக்கி முழக்கங்களை எழுப்பினா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G