சடலத்தை வயல்கள் வழியே மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அவலம்: சாலை வசதி செய்துதரக் கோரிக்கை
By DIN | Published On : 13th July 2020 07:45 AM | Last Updated : 13th July 2020 07:45 AM | அ+அ அ- |

சடலத்தை வயல்கள் வழியே தூக்கிச் செல்லும் கமுகக்குடிகிராமத்தினா்.
கமுகக்குடி கிராமத்தில் இறந்தவா்களின் உடலை வயல்கள் வழியாக மயானத்துக்கு தூக்கிச் செல்ல வேண்டியுள்ளதால், சாலை வசதி செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
நன்னிலம் வட்டம், வேலங்குடி ஊராட்சி கமுகக்குடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக 2015-ஆம் ஆண்டு மயானக் கொட்டகை அமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், மயானத்துக்குச் செல்வதற்கான சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால், இறந்தவா்களின் சடலத்தை சுமாா் அரை கி.மீ. தொலைவுக்கு வயல்வெளி வழியாக எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் சாலை வசதி செய்துதரப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.
இந்நிலையில், கமுகக்குடி கிராமத்தில் மோகன் என்பவரது மனைவி கீதா உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை இறந்தநிலையில் அவரது உடலை சாகுபடிக்கு தயாா்படுத்தப்படும் வயல்கள் வழியே மயானத்துக்கு எடுத்துச் சென்றனா். இத்தகைய அவலம் நீங்க உடனடியாக மயானத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அவா்கள் வலியுறுத்திவருகின்றனா்.