கூத்தாநல்லூர்: சனிப் பிரதோஷத்தில் ருத்ர கோட்டீஸ்வரருக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம்
By DIN | Published On : 19th July 2020 04:36 PM | Last Updated : 19th July 2020 04:36 PM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரருக்கு சனிப்பிரதோஷத்தில், 108 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் நஞ்சையும், புஞ்சையும் செழித்தோங்கும் திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலையில், மன்னார்குடியிலிருந்து 16 வது கி.மீ., திருவாரூரிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது. இத்திருத்தலம். யக்ஞ புரி,யாகபுரி, வேள்வி நகர் என்றெல்லாம் புகழ் பெற்றதும், சோழ மன்னர்களால் சிவ யாகம் நடத்த அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட புண்ணிய பூமிதான் வேளுக்குடி தலமாகும். வேள்விக்குடி என்பது மருவி தற்போது வேளுக்குடி என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் எல்லையில் ஏறத்தாழ 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ருத்ர கோட்டீஸ்வரர் கோயில், மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலின் இறைவன் ருத்ரகோட்டீஸ்வர சுவாமியாக, மேற்கு நோக்கி சுயம்பு லிங்க வடிவமாக மயானத்தை நோக்கி அருள்பாலிப்பது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ருத்ரகோட்டீஸ்வர சுவாமியின் அருகில் அபூர்வமான ருத்ரபீடம் என்ற உருண்டை வடிவ சிறிய பாணம் உள்ளது.
அதன் அருகில் திரிசூலம் உள்ளது. 12 ஜோதி லிங்கங்களில் வட இந்தியாவில் உள்ள கேதார்நாத் ஈஸ்வர் மகா காலேஸ்வரர் முன்பு திரிசூலம் உள்ளது போல், வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரர் முன்பும் திரிசூலம் அமையப் பெற்றது மிகவும் அபூர்வ அமைப்பாகும். இந்த அமைப்புடன் உள்ள ருத்ரகோட்டீஸ்வரரை பிரதோஷ வேளையில் வழிபடுவது,ஜோதிர் லிங்கங்களை வழிபட்ட பலனை தருவதாகும். இங்கு ஒரு முறை பிரதோஷ தரிசனம் செய்தால், ஒரு கோடி பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஐந்து பிரதோஷ விரதம் இருந்து வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு தீராத நோய் தீருதலும், நினைத்தக் காரியத்தில் வெற்றியும், குடும்ப ஒற்றுமை, மன நிம்மதி உள்ளிட்ட பல்வேறு நல்ல பலன்கள் உண்டாகும். இந்திரன் வழிபட்டு அருள் பெற்ற தலமாகும். மூன்று பிரதோஷங்கள் தொடர்ச்சியாக தரிசித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலான மூன்று தெய்வங்களையும் ஒரு சேர தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.
இக்கோயிலில், ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் அதிகார நந்திக்கு அமர்க்களமாக அபிஷேகங்கள் நடைபெறும். கரோனா தொற்று ஏற்பட்டதாலும், அதைத் தொடர்ந்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாலும், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், கிராமங்கள் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மட்டும் அரசின் விதிகளைப் பின்பற்றி திறப்பதற்கு உத்தரவிடப்பட்டன. அதன்படி, வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரர் கோயில் திறக்கப்பட்டது. சனிப் பிரதோஷத்தை அடுத்து, ருத்ர கோட்டீஸ்வரருக்கும், அதிகார நந்திக்கும், எண்ணெய் முதல் அரிசி மாவு, பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, கோயிலின் பிரகாரங்களில் எழுந்தருளியுள்ள குபேர கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியன், கோமலாம்பிகை, துர்க்கை, பைரவர், சண்டிகேஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு, தனியே நிற்கும் சூரியன், குருபகவான் மற்றும் சனகாதி முனிவர்கள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் எழுந்தருளியுள்ள சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ருத்ர கோட்டீஸ்வரருக்கும், அதிகார நந்திகேஸ்வரருக்கும் தங்கக் கவசங்கள் அணிவித்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, மகா தீபாராதனைக் காண்பிக்கப்பட்டன. சனிப் பிரதோஷம் என்பதாலும், 5 மாதமாக கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலையில் இருந்ததாலும், ஏராளமான பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.