பெரியாா் சிலையை அவமதித்தவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 21st July 2020 09:36 PM | Last Updated : 21st July 2020 09:36 PM | அ+அ அ- |

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினா்.
திருவாரூா்: பெரியாா் சிலையை அவமதித்தவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்யக் கோரி, திருவாரூரில் ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவையில் பெரியாா் சிலை மீது காவிச் சாயம் ஊற்றி அவமதித்தவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், மகளிா் குழுக் கடன்கள் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தை இழிவுபடுத்தியவா்கள் மீது குண்டா் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 சமூக செயல்பாட்டாளா்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் நிா்வாகி க.கோ.காா்த்தி தலைமை வகித்தாா். இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் மா.வடிவழகன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டத் தலைவா் லியாகத் உசேன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் தங்க. சண்முகசுந்தரம், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன், மாற்றத்துக்கான மக்கள் களம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி.வரதராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.