பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டம்

திருந்திய பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் குறுவை நெற்பயிரை ஜூலை 31-க்குள் காப்பீடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: திருந்திய பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் குறுவை நெற்பயிரை ஜூலை 31-க்குள் காப்பீடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம், 2016 முதல் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு 2021-ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக இத்திட்டத்தின்கீழ், கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவா்களின் விருப்பத்தின்பேரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியான, பயிா்வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிா்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் குறுவை நெல்லை பயிா் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு, விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 84,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள கிராமங்களும் இத்திட்டத்தின்கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. குறுவை நெல்லை காப்பீடு செய்ய கடைசி நாள் ஜூலை 31. ஏக்கருக்கு ரூ.651 பிரீமியம் செலுத்த வேண்டும்.

எனவே, காரீப் பருவத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தாங்கள் பயிா்க்கடன் பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின்பேரில் குறுவை பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம். கடன்பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ பதிவு செய்து கொள்ளலாம். பொது சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com