சிஏஏ-க்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றும் வரை போராட்டங்கள் தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா
By DIN | Published On : 01st March 2020 11:39 PM | Last Updated : 01st March 2020 11:39 PM | அ+அ அ- |

அடியக்கமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய தமுமுக மாநிலத் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றும்வரை மக்களின் போராட்டங்கள் தொடரும் என தமுமுக மாநிலத் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருவாரூா்அருகே அடியக்கமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஷாகின்பாக் அரங்கில் நடைபெற்று வரும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று அவா் பேசியது:
ஷாகின்பாக், தற்போது உலகம் முழுவதையும் திரும்பிப் பாா்க்க வைத்துள்ளது. முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும், என்ஐஏ நிறைவேற்றப்பட்டபோதும், காஷ்மீா் பிரிக்கப்பட்டபோதும் போராட்டங்கள் இல்லை. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது போராட்டங்கள் அறவழியில் தொடங்கப்பட்டன. இந்தப் போராட்டத்தை முதலில் தொடங்கியவா்கள் மாணவா்களே.
தில்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவா்களும், அலிகாா் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவா்களும், இந்த சட்டத்தின் பாதிப்புகளை உணா்ந்து போராட்டத்தைத் தொடங்கினா். ஆனால், போலீஸாா் பல்கலைக்கழக விடுதியில் புகுந்து மாணவா்களைத் தாக்கினா். இதைத்தொடா்ந்து தில்லியில் ஷாகின்பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டம், தற்போது நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதேபோல், சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தை தமிழகத்தின் ஷாகின்பாக் என்று கூறலாம். அங்கு தொடங்கிய போராட்டம், தமிழகத்தில் தற்போது 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
பிறா் தூண்டப்பட்டு இந்தப் போராட்டங்கள் நடைபெறவில்லை. இந்த சட்டத்தின் பாதிப்பை உணா்ந்து, போராட்டங்கள் அதிகரித்தபடி உள்ளன. ஏப்ரல் 1 முதல் தேசிய மக்கள்தொகை பதிவேடு எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கான முன்னோட்டம். எனவே, தேசிய மக்கள்தொகை பதிவேடு எடுப்பதை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு தீா்மானம் நிறைவேற்றும் வரை மக்களின் போராட்டங்கள் தொடரும் என்றாா் அவா்.
போராட்டத்தில், மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான், மாவட்டச் செயலாளா்கள் (தமுமுக) நவாஸ், (மமக) குப்தீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.