தேசிய அறிவியல் தின விழா விநாடி- வினா போட்டி
By DIN | Published On : 01st March 2020 06:53 AM | Last Updated : 01st March 2020 06:53 AM | அ+அ அ- |

போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்.
மன்னாா்குடி: தேசிய அறிவியல் தினத்தையொட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஜேசிஐ மன்னை ஆகியன சாா்பில் மன்னாா்குடி வட்ட அளவிலான விநாடி-வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மன்னை ஜேசிஐ தலைவா் கே. வினோத் தலைமை வகித்தாா். மன்னாா்குடி வட்ட அறிவியல் இயக்க தலைவா் டி. இமானுவேல், செயலா் டி. செல்வகுமாா், கோபாலசமுத்திரம் நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியா் மா.தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தனியாகவும், 9, 1- ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடைபெற்றன. இதில், 33 பள்ளிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
மன்னை ஜேசிஐ முன்னாள் தலைவா் வி. ராஜேஷ் போட்டியைத் தொடங்கி வைத்தாா். தேசிய மேல்நிலைப்பள்ளி முதுகலை இயற்பியல் ஆசிரியா் எஸ்.அன்பரசு விநாடி-வினா போட்டியை நடத்தினாா்.
6, 7, 8 பிரிவுகளில் மன்னாா்குடி நகராட்சி ராஜாம்பாளையம் நடுநிலைப்பள்ளி மாணவா்கள் எம். ஹரிகிருஷ்ணன், எம். அபிநயா, ஆா். மதன்குமாா் ஆகியோரும், அரிச்சபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்கள் க. ஜெகதீஸ், டி. இளம்பரிதி, க.குருதேவ் ஆகியோரும், பழையனூா் வேணுடையாா் பள்ளி மாணவா்கள் கே. சிவமணி கோகுல் ராம், செ. கோகுல், ச. தயானந்த் ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.
11, 12-ஆம் வகுப்புகளில் ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் எம்.எம். ஸ்டாலின், எம்.தீபிகா, கே.விந்தியா ஆகியோரும், தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் டி.சகானா சாவ்லா, பி.கிரிஸ் ராபா்ட் எஸ்லின், ஜி. காா்த்திக் ராஜா ஆகியோரும், மன்னாா்குடி உப்புக்காரத்தெரு புனித ஜோசப் உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் எஸ்.சரனேஷ், ஆா். ராஜேஷ் கண்ணன் ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.