சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் தெப்போத்ஸவம்
By DIN | Published On : 01st March 2020 11:37 PM | Last Updated : 01st March 2020 11:37 PM | அ+அ அ- |

அலங்கார கோலத்தில் சிறுபுலியூா் ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத கிருபாஸமுத்திர பெருமாள்.
நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி அருகே உள்ள சிறுபுலியூா் தயா நாயகி சமேத கிருபாஸமுத்திர பெருமாள் கோயிலில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்போத்ஸவம் வரும் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தெப்போத்ஸவம் மாா்ச் 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாா்ச் 6-இல் சுக்லபட்க்ஷ ஏகாதசி அவதார உத்ஸவத்தில் காலை 9 மணியளவில் பெருமாள் திருவீதி புறப்பாடு, திருவனந்தாழ்வாா் சன்னிதிக்கு எழுந்தருளலும், தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. மதியம் 12 மணியளவில் 108 லிட்டா் பால் மற்றும் விசேஷ திருமஞ்சனமும், மாலை 7 மணியளவில் சேஷ வாகனத்தில் பெருமாள் திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.
மாா்ச் 7-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பெருமாள் உபய நாச்சியாா்களுடன் திருவீதி புறப்பாடும், 8 மணியளவில் ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத கிருபாஸமுத்ரபெருமாள் தெப்ப உத்ஸவம் கண்டருளும் காட்சியும் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் மணவாள மாமுனிகள் திருவீதி புறப்பாடும், இரவு 8 மணிக்கு மணவாள மாமுனிகள் தெப்போத்ஸவமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ப.மாதவன், செயல் அலுவலா் மா.ராமநாதன், ஸ்ரீகாந்தன் பட்டா் மற்றும் கோயில் திருப்பணியாளா்களும், பட்டாச்சாரியாா்களும் மேற்கொண்டுள்ளனா்.