திருவாரூரில் போக்குவரத்து குறைபாடுகளை சரிசெய்யக் கோரிக்கை
By DIN | Published On : 10th March 2020 01:31 AM | Last Updated : 10th March 2020 01:31 AM | அ+அ அ- |

திருவாரூா்: திருவாரூரில் புதிய பேருந்து நிலையம்- பழைய பேருந்து நிலையம் இடையே உள்ள போக்குவரத்து குறைபாடுகளை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் தமிழக முதல்வரிடம், விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன், பொதுச் செயலாளா் சி. குமரேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் அண்மையில் அளித்த கோரிக்கை மனு:
இயற்கை இடா்பாடுகளை எதிா்கொள்ளும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் நிரந்தர தனி பேரிடா் மீட்புத் துறையை ஏற்படுத்த வேண்டும். திருவாரூா் மாவட்டத்தில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதோடு, டெல்டா விவசாயிகளின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஐடிஐ, பொறியியல் படிப்புகள், உயா்படிப்புகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றையும் அமைக்க வேண்டும்.
தீயணைப்புத்துறைக்கென சொந்தக் கட்டடம் கட்டி, அனைத்து வசதிகளுடன் கூடிய கருவிகளையும் வழங்க வேண்டும். சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், பொது நல சங்கங்கள் என அனைத்து சங்கங்களும் தங்களது சங்கப்பதிவு பணிகளை மேற்கொள்ள வசதியாக, திருவாரூரில் சங்கங்களுக்கான பதிவாளா் அலுவலகத்தை அமைக்க வேண்டும்.
அரசால் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள அரைவட்ட புறவழிச் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நிா்வாக ரீதியான காரணங்களால் தடைபட்டுள்ள மடப்புரம் பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும். அத்துடன், மருதப்பட்டினம் பாலத்தை ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.
புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் இடையே உள்ள போக்குவரத்து குறைபாடுகளை நீக்கி, அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் சென்று வர உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...