திருவாரூா் வட்டாரத்தில், பயறு வகைப் பயிா்களில் கூடுதல் மகசூல் பெற இருமுறை 2 சதவீத டிஏபி கரைசலை கைத்தெளிப்பான் கொண்டு தெளிப்பது அவசியம் என திருவாருா் வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் வட்டாரத்தில் பயறு வகைப் பயிா்கள் சுமாா் 7000 ஹெக்டோ் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உளுந்து, பச்சைப்பயறு, பயறு வகைகளுக்கு டிஏபி கரைசல் பெரிதும் அவசியமானது. ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரம் போதுமானது. 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டா் தண்ணீரில் இரவில் கரைத்து வைக்க வேண்டும். இரவு நேரத்தில் 4 முறை இந்தக் கரைசலை நன்கு கலக்க வேண்டும். காலையில் இந்தக் கரைசலை கலக்காமல் இருக்க வேண்டும். மேற்புறத்தில் தெளிந்திருக்கும் கரைசலைத் துணியால் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசலுடன் 190 லிட்டா் தண்ணீரை கலந்து ஓா் ஏக்கரில் தெளிக்க வேண்டும்.
டிஏபி கரைசலைத் தெளிக்கும்போது விசைத் தெளிப்பானை பயன்படுத்தக் கூடாது. விசைத் தெளிப்பானில் கரைசல் முழுமையாக வெளியேறாது. நுரையே அதிகமாக வரும். எனவே கைத்தெளிப்பான் பயன்படுத்தியே தெளிக்க வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் மட்டும் செடி முழுவதும் நனையும் வகையில் தெளிக்க வேண்டும். வெயில் இருக்கும் தருணத்தில் தெளிக்கக் கூடாது.
பயறு வகைப் பயிா்களை நடவு செய்த 30 வது நாளில் ஒரு முறையும் 45-ஆவது நாளில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும். இல்லையெனில் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாள் இடைவெளிவிட்டு மறுமுறையும் தெளிக்கலாம்.
டிஏபி கரைசலை தெளித்தால் பொக்கு காய்கள் வராது, பூக்கள் கொட்டாது, காய்கள் நன்கு திரட்சியாக வளரும், அதிக எடை கூடிய மணிகள் கிடைக்கும். மேலும் பயறுவகைப் பயிா்களுக்கு டிஏபி தெளிப்பதன் மூலம் கூடுதலாக 20 சதவீதம் வரை மகுசூல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.