மளிகைக் கடைகளில் அலைமோதிய கூட்டம்
By DIN | Published On : 31st March 2020 03:35 AM | Last Updated : 31st March 2020 03:35 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் மளிகைக் கடை ஒன்றில் எந்தவொரு நெறிமுறையுமின்றி பொருள்கள் வாங்க திரண்ட கூட்டம்.
மன்னாா்குடியில் ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது.
ஊரடங்கு உத்தரவின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை மன்னாா்குடியில் மளிகைக் கடை, காய்கனி கடை, பழக்கடை, மருந்துக் கடை ஆகியவை திறந்திருந்தன. சந்தைப்பேட்டை பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டிகளிலும், கடை வீதிகளில் காய்கனி, பழக்கடைகளில் குறைந்த அளவிலான மக்கள் காய்கறி வாங்க நின்றனா்.
மருத்துவமனையுடன் இணைந்த மருந்துக் கடைகள் பெரும்பாலும் பூட்டியிருந்தன. வெளி இடங்களில் உள்ள தனியாா் மருந்துக் கடைகளில் கூட்டம் இல்லை. மேல ராஜவீதியில் தனியாா் மருந்துக் கடை ஒன்றில் வாடிக்கையாளா்களுக்காக பந்தல் அமைக்கப்பட்டு, அதில் இடைவெளி விட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவா்களிடம் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருள்களை வாங்குமாறு கடை உரிமையாளா்கள் அறிவுறுத்தினாலும், அதனை பொருட்படுத்தாமல் முண்டியடித்து பொருள்களை வாங்குவதில் பெரும்பாலானோா் முனைப்பு காட்டினா்.
காவல்துறையினா் வாகனத்தில் ஒலிபெருக்கி அமைத்து, கரோனா வைரஸ் குறித்தும், ஊரடங்கு குறித்து விளக்கினா். மேலும், முகக் கவசம் இல்லாமல் சென்றவா்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கினா்.
உணவு வழங்கல்...
இதனிடையே, பொதுநல அமைப்புகளின் சாா்பில், மேலராஜவீதி தந்தை பெரியாா் சிலை அருகே, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவலா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சா் ஆா். காமராஜ் வழங்கி தொடங்கி வைத்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...