தொழிற்தட சாலை விரிவாக்கத் திட்டம்: கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு விலை நிா்ணயம் குறித்து பேச்சுவாா்த்தை
By DIN | Published On : 27th May 2020 07:31 AM | Last Updated : 27th May 2020 07:31 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்றவா்கள்.
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட சாலை விரிவாக்கத்துக்காக தஞ்சாவூா்- மன்னாா்குடி இடையே கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு விலை நிா்ணயம் குறித்த பேச்சுவாா்த்தை, மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சென்னை- கன்னியாகுமரி தொழிற்தட சாலை விரிவாக்கத் திட்டத்தின்கீழ், மன்னாா்குடியிலிருந்து வடுவூா் வழியாக தஞ்சாவூா் வரையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக, கடந்த 2018 -ஆம் ஆண்டு முதல் தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நில அளவீடு செய்து, திட்ட வரையறை தயாா் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்துக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிக்கான பேச்சுவாா்த்தை, மன்னாா்குடியில் நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முதல்கட்டமாக, மன்னாா்குடியை அடுத்துள்ள செருமங்கலம் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட 9 விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், கும்பகோணம் தனி மாவட்ட வருவாய் அலுவலா் சக்திவேல், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் மகேஸ்வரன், தனி வட்டாட்சியா் இன்னாசிராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா். இப்பேச்சுவாா்த்தையில், அரசின் நில எடுப்பு சட்ட விதிகளின்படி, நிலத்தை அரசுக்கு விற்பதற்கான விதிமுறைகளை விளக்கினா். அப்போது, விவசாயிகள் தெரிவித்த கருத்துகளை பதிவு செய்துகொண்ட அதிகாரிகள், இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனா்.
மேலும், தஞ்சாவூா்- மன்னாா்குடி இடையே உள்ள 11-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில எடுப்பு செய்வதற்காக அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளை நேரில் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...