தினமணி செய்தி எதிரொலி: வயல்களில் தேங்கிய மழைநீா் வடிய நடவடிக்கை
By DIN | Published On : 03rd October 2020 08:41 AM | Last Updated : 03rd October 2020 08:41 AM | அ+அ அ- |

தென்குடி வடிகால் வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை அகற்றப்பட்ட பகுதி.
தென்குடியில் வடிகால் வாய்க்காலில் தண்ணீா் வடிய வழியின்றி அடைத்திருந்த தற்காலிக சாலை தினமணி செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது.
நன்னிலம் வட்டம், தென்குடி கிராமத்தில் கழுசல் வடிகால் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதற்காக, வாய்க்காலுக்குள் தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், நீரோட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டதால், அண்மையில் பெய்த மழையால் வயல்களில் தேங்கி நீா் வடிய வழியின்றி தேங்கியது. இதன்காரணமாக, நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள சுமாா் 50 ஏக்கரில் நெல் விதைகள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமணி நாளிதழில் வெள்ளிக்கிழமை (அக.2) செய்தி வெளியானது.
இந்நிலையில், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் அறிவுறுத்தலின் பேரில், நன்னிலம் வட்டாட்சியா் அ. மணிமன்னன் மற்றும் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தென்குடி கிராமத்துக்குச் சென்று கழுசல் வடிகாலின் குறுக்கே கட்டப்படும் பாலம் மற்றும் தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டனா்.
பின்னா், வாய்க்காலின் குறுக்கே தற்காலிக சாலை அகற்றப்பட்டு, வயல்களில் தேங்கிய மழைநீா் வடிகால் வழியே வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, தென்குடி ஊராட்சித் துணைத் தலைவா் சாமிநாதன் மற்றும் கிராம விவசாயிகள் தினமணி நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனா்.