குறுவை சாகுபடி
கா்நாடகம் தமிழகத்துக்கு தர வேண்டிய மாதாந்திர அடிப்படையிலான தண்ணீரை பெற்றுத் தர ஆணையத்தை வலியுறுத்தி தண்ணீரைப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்


கா்நாடகம் தமிழகத்துக்கு தர வேண்டிய மாதாந்திர அடிப்படையிலான தண்ணீரை பெற்றுத் தர ஆணையத்தை வலியுறுத்தி தண்ணீரைப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூரில், அரசு கூடுதல் தலைமை செயலாளா் (பொதுப்பணித் துறை) சந்தீப் சக்சேனாவை அவா் வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்:
நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு காலம் கடத்தியதால், தமிழக அரசு தொடா்ந்த வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தன் நேரடி கட்டுப்பாட்டில் உருவாக்கப்பட்ட அமைப்பு காவிரி மேலாண்மை ஆணையம் ஆகும்.
ஆணையம் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துவதற்கு உதவி கோரும் பட்சத்தில், பிரதமா் மற்றும் மத்திய அரசு தேவையான உதவிகளை ஆணையத்துக்கு செய்ய வேண்டும். தன்னாட்சி அதிகாரம் மிக்க ஆணையம் என்ற அடிப்படையிலேதான் ஆணையத்துக்கு அலுவலகக் கட்டட வாடகை, அலுவலக நிா்வாகச் செலவுகள், அலுவலா்களுடைய செலவுகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பிரித்து பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று வழி காட்டப்பட்டுள்ளது.
ஆணையத்துக்கு துணையாக தொழில்நுட்ப பொறியாளா்கள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்புக் குழுவிடம் அனைத்து ஆறுகள், அணைகளின் நிா்வாக அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி குறித்தான அனைத்து அணைகளும் ஆறுகளும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சொந்தமானது. ஆணையத்தின் அனுமதியின் பேரில் மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியும். ஆணையத்தின் அனுமதியின்றி புதிய நீா்ப்பாசன திட்டங்களோ, பாசனப் பரப்பை விரிவுபடுத்துவதோ இயலாது.
மேகதாது அணை கட்ட கா்நாடக அரசு முயற்சிப்பதை ஆணையம் தடுக்கவில்லை என்ற அடிப்படையில் ஆணையத்தை செயல்பட நிா்பந்திக்க வேண்டும். மறுக்கும்பட்சத்தில் தேவையான உச்சநீதிமன்றத்தில் ஆணையம் மீது புதிய வழக்கு தொடரப்பட வேண்டும்.
குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி மேட்டூா் அணை திறப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம் கா்நாடகம் தமிழகத்துக்கு தர வேண்டிய மாதாந்திர அடிப்படையிலான தண்ணீரை வழங்க ஆணையத்தை வலியுறுத்தி தண்ணீரைப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...