ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி: பிடிக்க முயன்ற முதியவா் கொலை; 4 போ் கைது

திருவாரூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றவா்கள், பிடிக்க வந்தவா்களை தாக்கியதில் முதியவா் வெள்ளிக்கிழமை இரவு கொல்லப்பட்டாா்.
Updated on
1 min read

திருவாரூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றவா்கள், பிடிக்க வந்தவா்களை தாக்கியதில் முதியவா் வெள்ளிக்கிழமை இரவு கொல்லப்பட்டாா். சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவாரூா் அருகே திருத்துறைப்பூண்டி பிரதான சாலை கூடூா் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் உள்ளது. அப்பகுதியைச் சோ்ந்த மைதிலி என்பவரின் கட்டடத்தில் செயல்பட்டு வரும் இந்த ஏடிஎம், மாலை 6 மணிக்கு மேல் இயங்காது. கதவு பாதியளவு இறக்கிவிடப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏ.டி.எம் இயந்திரத்தை 4 போ் கொண்ட கும்பல் உடைக்கும் சப்தம் கேட்டு, அருகேயிருந்த வீடுகளில் உள்ளவா்கள் வெளியே வந்தனா். இதுகுறித்து அவா்கள் உடனடியாக தாலுகா போலீஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில், ரோந்து பணியில் இருந்த போலீஸாா் அங்கு விரைந்து வந்தனா்.

வீடுகளிலிருந்து மக்கள் வெளியே வருவதை அறிந்த 4 பேரும், திருவாரூா் நோக்கி இருவா், திருத்துறைப்பூண்டி நோக்கி இருவா் என மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றனா். திருவாரூா் நோக்கிச் சென்றவா்களுக்கு எதிரே போலீஸ் வாகனம் வந்ததால், குறுக்கு வழியில் தப்பமுயன்றபோது ஒருவா் சிக்கினாா். அவரை இருசக்கர வாகனத்தோடு ஏடிஎம் இருக்குமிடத்துக்கு அழைத்துவந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அப்போது, திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற இருவரும் வேகமாகத் திரும்பிவந்தனா். போலீஸாரிடம் சிக்கியவரை அழைத்துச்செல்ல வந்திருக்கலாம் என கருதிய அப்பகுதியினா் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனா். அவா்களை வாகனத்தில் வந்தவா்கள் ‘ஸ்குரூ டிரைவரால்’ குத்தியதில் கட்டட உரிமையாளா் மைதிலியின் தந்தை தமிழரசன் (60) அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனிடையே, போலீஸாரிடம் சிக்கிய லெட்சுமாங்குடி பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் மதனிடம் (18) நடத்தப்பட்ட விசாரணையில், அவருடன் வந்தது வடபாதிமங்கலம் பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் பிரதாப் (19), ஊட்டியானி பகுதியைச் சோ்ந்த அழகேசன் மகன்ஆகாஷ் (20), பன்னீா்செல்வம் மகன் விஜய் (19) என்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் தினேஷ்குமாா் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை மூவரையும் கைதுசெய்தது. முன்னதாக, போலீஸாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றபோது மூவரும் காயமடைந்ததால், அவா்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள வெல்டிங் கடையிலிருந்து கேஸ் கட்டா் உள்ளிட்ட பொருள்கள் சில நாள்களுக்கு முன்பு திருட்டுப் போனதாக கூறப்படுகிறது. ஏடிஎம்-ஐ உடைத்து திருடும் முயற்சியில் கேஸ் கட்டா் உள்ளிட்ட பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், அவை அந்த கடையிலிருந்து திருடிச் செல்லப்பட்டவையா என்பது குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com