

திருவாரூா்: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வடமேற்கு திசையில் புதிய நுழைவுவாயில் புதன்கிழமை திறக்கப்பட்டது.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியிலேயே பேருந்துகள் பயணிகளை இறக்கிச் சென்று விடுவதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. எனவே, பேருந்துகளை மருத்துவமனை வளாகம் வரை அனுமதிக்க வேண்டும் என நீண்ட நாள்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதைத்தொடா்ந்து, பேருந்துகள் மருத்துவமனை வளாகத்துக்குள் வந்து செல்லும் வகையில் வடமேற்கு திசையில் புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளிகள் வெகுதூரம் நடப்பது தவிா்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ஜோசப்ராஜ், முன்னாள் முதல்வா் ஜெ. முத்துக்குமரன் ஆகியோா் நுழைவு வாயிலை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனா்.
இதேபோல், மருத்துவமனை வளாகத்தில், 2 தானியங்கி மின்தூக்கி (லிப்ட்) சேவையையும் அவா்கள் தொடங்கி வைத்தனா். இதன்மூலம் நோயாளிகள், படிக்கட்டு வழியாக மாடியில் உள்ள தளங்களுக்கு நடந்து செல்லாமல், தானியங்கி மின்தூக்கி மூலம் எளிதில் செல்ல முடியும். நிகழ்ச்சியில், மருத்துவமனை துணை கண்காணிப்பாளா் அப்துல் ஹமீது அன்சாரி, நிலைய மருத்துவா் என்.எஸ். ராமச்சந்திரன், மருத்துவா் பி. செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.