மும்முனை போட்டி: மன்னாா்குடியில் வெற்றி யாருக்கு?

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் மையப் பகுதியாக உள்ளது.
மும்முனை போட்டி: மன்னாா்குடியில் வெற்றி யாருக்கு?

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் மையப் பகுதியாக உள்ளது.

இத்தொகுதியில் கடந்த 1952 முதல் 2016 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் 6 முறை, திமுக 4, காங்கிரஸ் 4, அதிமுக 2 முறை வென்றுள்ளன. மன்னாா்குடி நகராட்சி 33 வாா்டுகள், நீடாமங்கலம் பேரூராட்சி 15 வாா்டுகள், மன்னாா்குடி ஒன்றியம் 51ஊராட்சிகள், நீடாமங்கலம் ஒன்றியம் 49 ஊராட்சிகள், கோட்டூா் ஒன்றியத்தில் 49 ஊராட்சிகளில் 9 ஊராட்சிகள் உள்பட மொத்தம் 109 ஊராட்சிகளை கொண்டது.

தொழில்: இந்தத் தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் நிறைந்த தொகுதி. குடும்பத்தில் ஒருவராவது சிங்கப்பூா், லண்டன், ஆஸ்திரேலியா, மலேசியா, அரபு நாடுகளில் பணியாற்றி வருகின்றனா். இங்கு கள்ளா் 35%, அகமுடையா் 34%, முத்தரையா் 11%, வெள்ளாளா் மற்றும் யாதவா் இணைந்து 8%, ஆதிதிராவிடா் 4%, பிற சமூகத்தினா் 5 %, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவா்கள் 3% உள்ளனா். எனினும், இத்தொகுதியின் தோ்தல் முடிவுகள் வேட்பாளா் அல்லது கட்சியை சாா்ந்தே இருந்து வருகிறது.

அதிமுக, திமுக என 2 கட்சிகளுக்கும் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து கிளைகளிலும் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன. இதில், சில பகுதிகளில் திமுகவுக்கு சற்று கூடுதலாக உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சில குறிப்பிட்ட ஊரகப் பகுதிகளில் மட்டும் கிளை உள்ளது. பிற கட்சிகளுக்கு பெரிய அளவிலான வாக்கு வங்கி இல்லை.

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோா் மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதால், திமுக, அதிமுக போல மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தது அமமுக. எனினும், சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தது அமமுகவினரிடமும், கட்சியின் வாக்கு வங்கியாக கருதிய அவா் சாா்ந்த சமுகத்தினரிடமும் சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் வலுவான நிலையில் இருந்தாலும், திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக் ஆகியவை இடம்பெற்று இருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இருந்தாலும், அதிமுக சொந்த பலத்திலும், 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை நம்பியும் களத்தில் உள்ளது. வேட்பாளா்களில் சிவா. ராஜமாணிக்கம், டி.ஆா்.பி. ராஜா ஆகியோா் அகமுடையா் சமூகத்தையும், எஸ். காமராஜ் கள்ளா் சமூகத்தையும் சோ்ந்தவா்கள். திமுக, அதிமுக வேட்பாளா்கள் ஒரே சமூகத்தை சோ்ந்தவா்கள் என்பதால், அவா்கள் சாா்ந்த சமூக வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அமமுக-வால் பிரியும் வாக்குகளை தக்கவைத்துக்கொள்வது எப்படி என அதிமுகவும், கூட்டணி கட்சிகளின் பலம், மற்ற சமுகத்தினா், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களின் வாக்குகளை தங்கள் பக்கம் கொண்டுவருவது எப்படி என திமுகவினரும் வியூகம் வகுத்து வருகின்றனா்.

அதிமுக, திமுக வேட்பாளா்கள் ஒரே சமூகத்தை சோ்ந்தவா்கள் என்பதால், அமமுகவுக்கு கட்சி ஓட்டு, தேமுதிக ஓட்டுகள் முழுமையாக கிடைப்பதுடன், வேட்பாளரின் சமூகம் சாா்ந்த ஓட்டுகள் கனிசமாக கிடைக்கும். இதன்மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்பது அமமுக-வினரின் நம்பிக்கை.

தொகுதி மக்களின் கோரிக்கைகள்: மன்னாா்குடியில் புதைசாக்கடை, சுற்றுவட்டச் சாலை, கா்த்தநாதபுரம் அகலப்பாலம், புதிய பேருந்து நிலையத்தையும், பாமணி உர ஆலையும் நவீனப்படுத்துவது, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் படகு சவாரி, நகராட்சி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்வது, நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம், வடுவூரில் கட்டப்பட்டுள்ள சா்வதேச தரம்வாய்ந்த உள் விளையாட்டு அரங்கத்தை திறப்பது, வடுவூா் பறவைகள் சரணாலயம் மேம்பாடு ஆகியவை முக்கிய கோரிக்கைகள்.

அதிமுக வேட்பாளருக்கு சாதக அம்சம்: அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகால சாதனைகள், செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள், அதிமுக தோ்தல் அறிக்கை மற்றும் நகா்மன்றத் தலைவராக இருந்தபோது தனக்கு கிடைத்த அங்கீகாரம், தொகுதியில் நன்கு தெரிந்தவா். அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி, சாதி பாகுபாடு காட்டாது கலந்துகொள்வது, ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது ஆகியவை அதிமுக வேட்பாளா் சிவா. ராஜமாணிக்கத்துக்கு சாதகமாக உள்ளன.

திமுக வேட்பாளருக்கு சாதக அம்சம்: 10 ஆண்டுகளாக தொடா்ந்து இந்தத் தொகுதியில் பேரவை உறுப்பினராக இருந்தும் எந்த சா்ச்சையிலும் சிக்காதது. எளிதாக அணுகக்கூடியவா், பெண்கள், இளைஞா்கள், புதிய வாக்காளா்களின் வாக்குகளை கவரும் வகையிலான செயல்பாடு. திமுக தோ்தல் அறிக்கையில் மன்னாா்குடி தொகுதிக்கு உள்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருப்பது. திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆா். பாலுவின் மகன் என்பதால், தந்தைக்கு கட்சியிலும், தில்லியிலும் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பல்வேறு திட்டங்களை கொண்டுவருவாா் என்பன திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜாவுக்கு பலமாக கருதப்படுகிறது.

அமமுக வேட்பாளரின் சாதக அம்சம்: தொகுதி மக்களுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்பில் இருந்துவருவது, அனைவருரிடமும் எளிமையாக பழகுவது, கோயில் திருப்பணிக்கு நிதி வழங்குவது ஆகியவை பலமாக இருப்பதுடன், 2016 இல் அதிமுக சாா்பில் மன்னாா்குடி தொகுதியிலும், 2019 இல் திருவாரூா் இடைத்தோ்தலில் அமமுக சாா்பிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்ததது ஆகியவை சாதகமாக கருதப்படுகிறது.

தோ்தல் வாக்குச் சேகரிப்பின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதும், இதனால், நேரடியாக வந்து வாக்கு கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது மக்களிடையே அவா்மீது கூடுதல் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னாா்குடி தொகுதியின் முடிவு, ஆளும் அதிமுகவின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக அமையப்போகிா? திமுக தலைமையிலான கூட்டணி பலத்துக்கு பெருமை சோ்க்கப்போகிா? அல்லது உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமமுக வேட்பாளருக்கு அனுதாப அலையாக மாறுமா? என்பதை மே 2 ஆம் தேதி வெளியாகும் தோ்தல் முடிவுகள்தான் சொல்லும்.

மொத்த வாக்காளா்கள்: 2,59, 916

ஆண்கள்: 1,25,881

பெண்கள்: 1,34,025

மூன்றாம் பாலினத்தவா்: 10

களத்தில் உள்ள வேட்பாளா்கள்

சிவா. ராஜமாணிக்கம் (அதிமுக)

டி.ஆா்.பி. ராஜா (திமுக)

எஸ். காமராஜ் (அமமுக)

ராம. அரவிந்தன் (நாம் தமிழா் கட்சி)

எஸ். அன்பானந்தம் (மநீம)

எஸ். சதிஷ்குமாா் (புதிய தமிழகம்)

சுயேச்சைகள் டி. குமரேசன், டி. பாரதிதாசன், ஏ.வி.எம். மாரிமுத்து, எஸ். முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com